

சிவராமன் என்னும் ஒரு கதாபாத்திரத்திற்கு, ராஜா என்கிற ஒரு கதாபாத்திரம், ‘ஏழு பேர்’ என்ற நாவலைக் கல்யாணப் பரிசாகத் தருவதாக அமைகிறது இந்த நாவல். சிவராமன், ராஜா (கதைசொல்லி), கமலா, அசட்டு அண்ணாமலை, சின்னப் பிள்ளை ராமசாமி, கோதண்ட ராம நாயுடு, அவள் (லீலா) ஆகிய ஏழு பேர் பற்றிய கதைகள்தான் இது.
கிட்டத்தட்ட 80 வருடங்கள் கழித்து, தற்போது மறுபதிப்பு கண்டுள்ள இந்த நாவல், இப்போதைய சூழலுக்குத் தேவையானது. ஏனெனில், இன்றைய நவீன திராவிடம், சமத்துவத்தையும் சீர்திருத்தத்தையும் வெகுவாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. மொழியிலும் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் இன்றைய திராவிடம், வணிக நோக்கிலான சித்தாந்தத்தை முன்வைத்துள்ளது. இன்றைய திராவிடச் சித்தாந்தவாதிகள் பலர், சினிமா தயாரிக்கிறார்கள்; சாராயம் காய்ச்சுகிறார்கள்; பிறமொழிக் கலப்பை உருவாக்கி நவீனமாக்குகிறார்கள்.
இவற்றையெல்லாம் க.நா.சு 1946இல் எழுதி இருப்பது ஆச்சரியம் தருகிறது. லீலா என்கிற பாலியல் தொழிலாளி வீட்டிற்கு, ஊரே போய் வர விரும்புகிறது. தெருவே அசிங்கமாகிவிட்டது என்று சொல்லும் ஒரு கதாபாத்திரமும், லீலா உடன் ஓர் இரவு தங்க ஆசைப்படுகிறது. நல் ஒழுக்கம் கொண்ட ஒரு மனிதனுக்குப் பிறந்த சின்னப் பிள்ளை ராமசாமி அங்கேயே தங்கிவிடுகிறார். கெட்ட சகவாசங்களைக் கொண்ட, பெரியப்பாவிற்குப் பிறந்த, சின்ன பிள்ளையின் அண்ணன், ஒழுக்கவாதியாக இருக்கிறார். பொதுச் சொத்தில் இருந்து, சின்னப் பிள்ளைக்குத் தர வேண்டிய சொத்தை இன்னும் அவர் பிரித்துத் தரவில்லை.
லீலாவின் வீட்டிற்கு வந்து செல்லும் மேல் குறிப்பிட்ட ஆறு கதாபாத்திரங்களும், நகர மனிதர்களின் குறியீடுகள். யாரெல்லாம் லீலாவின் வீட்டை வெறுக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் ஓர் இரவில் தங்க ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள். ‘ஒரு முத்தம் கொடுத்தால்தான் விடுவேன்’ என்று, லீலாவின் குட்டிப் பாப்பா கமலாவிடம் சொல்கிறான் ராஜா. கமலா தரும் முத்தத்தை, லீலாவின் முத்தமாகவே நினைக்கிறான் ராஜா.
ராஜாவின் இந்தத் தன்மையைத் தோல் உரித்துச் சொல்கிறாள் ராஜாவின் மனைவி ராஜி. ராஜியின் வீட்டுக்கு அவ்வப்போது வந்து காப்பித்தூள் கேட்கும், நாளிதழ் கேட்கும் சிறுமி கமலா, ‘சார், ஒரு முறை வீட்டுக்கு வாங்களேன்’ என்று கூப்பிடுகிறாள். இவர்கள் வழியாக, இதுதான் சமூகம் என்று கூறுகிறார் க.நா.சு. நாவலின் கதை முக்கியமல்ல. நாவலில் வரும் கதாபாத்திரம் தனக்குத் தானே சுய சிகிச்சை செய்து கொள்கிறது.
திண்ணையில் அமர்ந்தபடி, எட்டு நாள்களாக, லீலாவின் வீட்டுக்கு வந்துபோவோரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாவின் மனதில் லீலாவும் அமர்ந்துவிடுகிறார். சாதாரணமான மக்களைவிட தான் எவ்வளவு மேம்பட்டவன் என்று இதுகாறும் ராஜா உற்றிருந்த தற்பெருமை, தகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்குள் கீழ்ப்பட்ட ஒரு தத்துவம் தன்னுள்ளே பதுங்கி உள்ளதை இந்த எட்டு நாளில் ராஜா அறிந்துகொள்கிறான். அறிவு புதுசாகப் பயத்தையும் சஞ்சலத்தையும் தருகிறது என்கிறார் க.நா.சு. ஒரு கட்டத்தில், இந்தச் சமூகத்தில் பாலியல் தொழிலாளிகள் வாழ உரிமை உண்டு என்று குறிப்பிடும் ராஜா, லீலாவை அக அழகுகள், அக அமைதிகள் கொண்ட ஒரு பெண்ணாகவே பார்க்கிறான்.
நாட்டுக்கு நல்லது சொல்கிறேன் என்று சொல்பவனை ஒரு கரடியாகவே பார்க்கிறார் க.நா.சு. ‘நாட்டுக்கு, சமூகத்துக்கு நல்லது சொல்பவன், இது நல்லது, இது நல்லது என்று எவ்வளவு மேடைகளில் கரடியாகக் கத்தினாலும் சரி - அது பலிப்பதில்லை. நாட்டுக்கு நல்லது செய்வது இப்படித்தான் என்று அவன் வாழ்ந்து காட்டினானால், அவனைப் பின்பற்ற இரண்டொருவர் வருவார்கள். அடுத்த தலைமுறையில் இந்த இரண்டொருவர் தொகை இருபது, நாற்பதாகப் பெருகலாம்.
கடைசியில் ஒரு நாள் நாட்டுக்கு நல்லது விளைந்துவிடலாம். சமூகச் சீர்திருத்தத்தின் அடிப்படையான தத்துவமே இதுதான். இதை மறந்துவிட்டு, சமூகச் சீர்திருத்தக்காரர்கள் சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று மேலே இருந்து இல்லாத அழுத்தம் கொடுத்துக் கரடியாகக் கத்துவது லாபம் இல்லாத விஷயம்தான்’ என்ற உரையாடலை முன்வைக்கிறது நாவல்.
மறுமணம், கலப்பு மணம் ஆகியவற்றுக்கு இடையே, நம் சமூகம் ஏன் பாலியல் தொழிலாளிகளை உருவாக்கி இருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சித்தாந்தம் என்ன செய்யப் போகிறது என்று இந்த வாழ்வை எளிமையாகக் கேள்வி கேட்கும் க.நா.சு, சித்தாந்தத்துக்கு / ஓர் இயக்கத்திற்கு எதிராக ஒரு நாவலை எழுதியிருக்கிறார். க.நா.சு.வின் முதல் அரசியல் நாவலாக இதைக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. நவீன திராவிடச் சிந்தனையையும், பண்பாட்டு மையத்தையும் கேள்வி கேட்கும் நாவல்கள், தமிழில் எப்போது எழுதப்படும் என்று தெரியவில்லை.
இந்த நாவலில், ஓர் இடத்தில் கலையைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது: ‘கலையை மறைப்பதுதான் கலை’ இந்த நாவல் உள்ளுக்குள், தற்போதைய திராவிட மாயைகளின் கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது. அன்று ஆரிய மாயை என்றார் அண்ணா. இப்போதைய சூழல், திராவிட மாயையாக மாறி இருக்கிறது. இந்த நாவலை யாரெல்லாம் வாசிக்கிறார்களோ அவர்களெல்லாம், இந்தத் திராவிட மாயைகளின் போலித்தனத்தை, இன்றைய சூழலில், தன்னை மீறிப் பொருத்திப் பார்ப்பார்கள். பொருத்திப் பார்க்கச் செய்துவிடும்.
இந்த நாவலின் வழியே, மேதைமையற்ற மேதைமையாக அமர்கிறார் க.நா.சு. ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக்கொள்வதுதான் சீர்திருத்தம் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்த நாவலை, இப்போதைய சூழலில் வாசிக்கும்போது, இன்றைய சூழலில் ஒலிக்கும் சமத்துவச் சிந்தனைகள் மேல், பண்பாட்டு மையங்கள் மேல் நிறைய கேள்விகளும் தோன்றத்தான் செய்கின்றன. ஏழு பேர், ஏழு விதம். பிரபஞ்சமும் அப்படித்தான்.
ஏழு பேர் (நாவல்)
க.நா.சுப்ரமண்யம்
எழுத்து பிரசுரம்,
விலை: ரூ.140
தொடர்புக்கு: 89250 61999