Published : 04 May 2018 08:24 AM
Last Updated : 04 May 2018 08:24 AM

திரும்பும் இடமெல்லாம் மோனலிஸாதான்!: ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் நேர்காணல்

ப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் என்று அசராமல் உழைப்பவர் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர். இவருடைய ஓவியங்கள் பல்வேறு முன்னணி இதழ்களையும், புத்தகங்களையும் அலங்கரித்திருக்கின்றன. விதவிதமான கலைப்பொருட்கள் கண் சிமிட்டும் அவருடைய அலுவலகத்தில் ஏ.பி.ஸ்ரீதருடன் உரையாடியதிலிருந்து...

ஓவியம், ஓவியங்களின் ஓவியம், கலைப் பொருட்கள் சேகரிப்பு... ஏன் இவ்வளவு கலைப் பித்து?

இந்தக் கலைப் பித்துதான் நம்மை நடத்திக்கிட்டுருக்குண்ணே. பூர்விகம் காரைக்குடி பக்கம். என்னோட சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டோம்ணே. தண்டையார்பேட்டையில் வீடு. வடசென்னையில ஒரு சாதாரணக் குடும்பத்திலேருந்து இன்றைக்கு இங்க வந்திருக்கன்னா, அது ரொம்ப சாதாரண விஷயமில்லை. முப்பது வருஷத்துக்கு முன்னாடி சோழா ஹோட்டல் பக்கத்துல இருக்குற ரஷ்ய கலாச்சார மையத்துல நடந்த ஓவியக் கண்காட்சியில என்னோட ஓவியங்களும் இடம்பெற்றதுண்ணே. அங்க ஒரு மேல்தட்டு விமர்சகர் அம்மா வந்தாங்க. மேலோட்டமா பார்த்துட்டு என்னிடம் கேட்டாங்க, ‘கண்காட்சிக்குன்னு அவசர அவசரமா தயார்பண்ண ஓவியங்களா?’ன்னு.

ஒரு ஓவியத்துக்கு ஃப்ரேம் போடறதுக்கே அப்போ 500 ரூபா ஆகும். அதுக்கே காசில்லாத ஒருத்தன் நான். அப்பாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி ஓவியங்களுக்கு ஃப்ரேம் போட்டுட்டு வந்தேன். அவங்களுக்கு அதெல்லாம் தெரியலை. ஆனால், இயக்குநர் ப.திருப்பதிசாமி எனக்கு ஒரு கடிதம் எழுதினார்ணே. அவர் இப்போ உயிரோடு இல்லை. “வடசென்னையைத் தாண்டி ஒருத்தன் சோழா ஓட்டல்கிட்ட வர்றது எவ்வளவு பெரிய விஷயம். அதை நெனைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு” அப்படின்னு எழுதியிருந்தார். அதுதான்ணே பெரிய விஷயம்!

ஓவியத்தோடு தொழில்நுட்பத்தை இணைத்துச் செயல்படுபவர் அல்லவா நீங்கள்!

ஆமான்ணே! இன்னைக்கு என்னையவிட பல மடங்கு தெறமையான ஓவியர்கள் நெறையப் பேர் இருக்காங்க. ஆனா, அவங்கள்லாம் தொழில்நுட்பம் ஓவியத்துக்கு எதிரிங்கிற நெனப்போட இன்னும் இருக்காங்க. ஒரு உதாரணம் சொல்றேன்ணே. நான் கேன்வாஸ்ல வரைஞ்ச காலத்துல ஒவ்வொரு வீடா குடிமாறி போறப்போ எல்லா ஓவியங்களையும் தூக்கிட்டு இடம் மாறுறது அவ்வளவு சிரமம். எங்க அம்மா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வான்னு திட்டுவாங்க. அது மட்டுமில்லாம பெய்ண்ட் வாங்குறது, கேன்வாஸ் வாங்குறதுன்னு நெறைய செலவும் பிடிக்கும். வரைஞ்ச ஓவியத்தை போட்டோ எடுத்தாலும் அது அவ்வளவு துல்லியமா இருக்காது. அதோட நம்ம ஓவியத்தைப் பத்திரமா பாதுகாக்குற வேலையும் இருக்கு. பலரும் நினைக்கிறாங்க கம்ப்யூட்டர் தானா வரைஞ்சுக்கும், ஓவியருக்கு வேலையே இல்லன்னு. கம்ப்யூட்டர் எப்படிங்க தானா வரையும்? அதிலயும் நாமதானே வரையுறோம்! வரைஞ்ச ஓவியத்தை பாதுகாப்பா வெச்சுக்கவும் முடியும்.

சரி, இப்போது டெல்லியில் நடந்து முடிந்த உங்கள் கண்காட்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்!

டெல்லி இத்தாலிய தூதரகத்துல மே-2 என்னோட ஓவியக் கண்காட்சி நடந்தது. இத்தாலிய ஓவியர் லியனார்தோ டாவின்ஸியும் ரவிவர்மாவும் கைகுலுக்கிக்கிட்ட நிகழ்வு அது. அதாவது ரவிவர்மாவோட ஓவியங்கள், முகம் மட்டும் மோனலிஸா! கண்காட்சியில நல்ல வரவேற்பு கிடைச்சது.

அடுத்தது என்ன திட்டம்?

பல திட்டங்கள். அதில் ஒண்ணுதான் ஆயிரம் மோனலிஸா! ஒரு மியூஸியம்ணே. அதுக்குள்ளே நீங்க நுழைஞ்சா திரும்புன இடமெல்லாம் மோனலிஸாதான்ணே. வெவ்வேற உடைகள்ல, வெவ்வேற தோரணையில, வெவ்வேற மனிதர்கள்ல மோனலிஸா தெரிவாங்க. ஒபாமா, டி காப்ரியோல ஆரம்பிச்சு நம்ம நாட்டுத் தலைவர்கள் அப்புறம் சச்சின், சானியா, ஷாரூக் கான், பாலச்சந்தர், வாலி போன்ற பிரபலங்கள்னு பலரும் மோனலிஸா ஓவியமா இருப்பாங்க.

1999-லருந்து இதுக்காக வரைஞ்சுகிட்டு இருக்கேன்ணே. 200 ஓவியங்களுக்கு மேல வரைஞ்சுட்டேன். உலக நாடுகள் பலதுலயும் இந்த ஓவியக் கண்காட்சிக்கு நிரந்தரமா இடம் கிடைச்சுதுன்னா பெரிய திருப்திண்ணே. ‘உங்க நாட்டு டாவின்ஸியோட ஓவியமான ‘மோனலிஸா’ இப்போ உங்க நாட்டுல இல்ல. பிரான்ஸுலதான் இருக்கு.

அதனால ஒரு மோனலிஸாவுக்குப் பதிலா ஆயிரம் மோனலிஸாவ உங்களுக்குத் தர்றேன்’னு இத்தாலிக்காரங்கட்ட யோசனை சொல்லிருக்கேன். நல்ல பதில் கிடைக்கும்னு நம்புறேன்ணே!

நீங்க வரையுற ஓவியங்கள் பலவும் நகலெடுப்பவையாகவே இருக்கின்றனவே? ஏ.பி. ஸ்ரீதரின் தனித்துவம் எங்கே என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நான் செய்வதும் ஒரு வகையான திறமைதான். ஆனா, ஏ.பி. ஸ்ரீதர் இது இல்ல அப்படிங்கறது எனக்குத் தெரியும். அதை உலகத்துக்கும் தெரிய வைக்கிறதுக்கான பிரம்மாண்டமான முயற்சியில பல ஆண்டுகளா ஈடுபட்டுட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் வருஷத்துல உண்மையான ஏ.பி. ஸ்ரீதர நீங்க பார்ப்பீங்க. அதுதான் ஓவிய உலகத்துக்கு என்னோட பெரிய பங்களிப்பா இருக்கும்ணே!

- படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x