Last Updated : 08 Apr, 2018 10:07 AM

 

Published : 08 Apr 2018 10:07 AM
Last Updated : 08 Apr 2018 10:07 AM

சரியானோரைச் சென்றடைந்திருக்கின்றனவா தமிழக அரசு விருதுகள்?

தமிழ் ஆளுமைகளை அங்கீகரிக்கும் தமிழ்நாடு அரசின் விருதுகள் 2016, 2017 இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழறிஞர்கள், சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்புகள், கணினித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக மென்பொருட்களை உருவாக்கியவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அயலகத் தமிழறிஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் இந்த விருதுகள் சரியானோரைப் போய்ச் சென்றடைந்திருக்கின்றனவா என எழுத்தாளுமைகள் சிலரிடம் பேசினேன்.

எப்போதும்

இப்படித்தான்!

சி.மோகன்

உண்மையான கலை, இலக்கியம் வேறாக இருக்கிறது; அரசு நினைக்கும் கலை, இலக்கியம் வேறொன்றாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது வேறொரு துறை என்று நினைத்தார்கள். ஆனால், திராவிடக் கட்சிகள் கலை, இலக்கியத்தையும் தன்னுடையது என நினைத்தன. அவர் களுக்குள்ளேயே கவிஞர்களும் எழுத்தாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இருப்பதாக நம்பினார்கள். எப்போதுமே இது சரியான பாதையில் சென்றதில்லை. சரியாகச் சென்றால் வேண்டுமானால் நாம் ஆச்சரியப்படலாம். இந்தப் பட்டியலில் ஒருசிலர் மட்டும் கலை, இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் கலை, இலக்கியப் பங்களிப்பு சார்ந்து இந்த விருதுகள் கிடைத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.

இப்படியே தொடர்வது

நல்லதல்ல!

வீ.அரசு

தமிழ்த் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் கட்சி சார்ந்தவர்களுக்குக் கொடுத்திருப்பதாகவே நினைக்கிறேன். அரசாங்கம் ஏதும் வரையறை வைத்துக்கொண்டோ அல்லது வெளிப்படைத்தன்மையுடனோ நடந்துகொள்ளவில்லை. இதுமாதிரியான செயல்பாடுகள் நேர்மையாக நடந்ததாக வரலாறும் இல்லை. இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. அதனால், இப்படியே தொடர்வது நல்லதே இல்லை!

நிறைய பேர் தகுதியானவர்கள்!

தமிழச்சி தங்கபாண்டியன்

அநேக விருதுகள் தகுதியானவர் களுக்குக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, மொழியியல் விருது பெற்றிருக்கும் சுபாஷினி இவ்விருதுக்கு மிகத் தகுதியானவர். சுகிசிவம், குறிஞ்சிவேலன், சச்சிதானந்தம் ஆகியோரும் விருதுக்குப் பொருத்தமானவர்களே. அம்மா இலக்கிய விருது என்பது மட்டும்தான் வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு ஜெயலலிதாவின் பங்களிப்பு என்ன? எத்தனையோ அறிஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். வேறு ஒரு அறிஞரின் பெயரால் இந்த விருதைக் கொடுத்திருக்கலாம்.

மக்கள் பணம்

வீணடிப்பு!

ஜி.குப்புசாமி

மாநில அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் விருதுகள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன? விருதுகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் யார்? எல்லாவற்றையும் மிக ரகசியமாக வைத்திருக்கிறது மாநில அரசு. உதாரணமாக, சாகித்ய அகாதமி, மொழிபெயர்ப்புக்கென சில அளவுகோல்களை வைத்துள்ளது. அதன் இணையதளத்தில் எல்லா விவரங்களும் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசு இப்போது அறிவித்திருக்கும் மொழிபெயர்ப்புக்கான விருதில், ஒருசிலரைத் தவிர வேறு யாரையும் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அவர்கள் என்னென்ன புத்தகங்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள், எவ்விதத்தில் பங்களித்திருக்கிறார்கள் என எந்த விவரங்களையும் அறிந்ததில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொஞ்சம்கூட அக்கறையின்றி வீணாக்கும் பொறுப்பின்மை இது.

துண்டுப்பிரசுரமா

விருதுகள்?

தி.பரமேசுவரி

கி

ட்டத்தட்ட 90 பேருக்கு மொத்தமாக விருதுகள் வழங்கியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதைப் போல இருக்கிறது. விருது வாங்குபவர்களுக்கும், யாரின் பெயரால் வழங்குகிறார்களோ அந்த ஆளுமைகளுக்குமான அவமரியாதை இது. அதேபோல, விருது என்பது செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது வழங்க வேண்டியது. அப்போது அது மேலும் இயங்குவதற்கான ஊக்கமாக அமையும். அவ்வாறு செயல்படும் காலத்தில் இல்லாமல் ஓய்ந்த பிற்பாடு வழங்குவது முறையல்ல. வழங்கப்படும் தொகை முக்கியம்தான்; அதைவிடவும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதே அவர்களுக்கான உந்துசக்தியாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x