Published : 24 Feb 2018 08:55 AM
Last Updated : 24 Feb 2018 08:55 AM

தொடுகறி: அன்பின் பெருவெளி

தமிழில் அரேபிய காமசூத்திரம்

செ

ன்னை ஜாம் பஜார் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்துவரும் எழுத்தாளர் பெரு.முருகன், மொழிபெயர்ப்புகளாலும் கவனம் ஈர்ப்பவர். இரா.செந்திலுடன் இணைந்து, டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹோமரின் பள்ளியறை ஒடிசியை மொழிபெயர்த்திருக்கிறார். அடுத்து, உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘நேம் ஆஃப் தி நேராஸ்’ புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், பாலியல் தொடர்பான நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவருடைய மொழி பெயர்ப்பில் நெஃப்சுவாஹியின் ‘நறுமணத் தோட்டம்’ கடற்குதிரை பதிப்பகமாக வெளியாகியிருக்கிறது. நறுமணத் தோட்டம், அரேபியாவின் காமசூத்திரம்!

நிலத்தடி நீரின் மகத்துவம் சொல்லும் கல்வெட்டு

கு.ப.ராஜகோபாலனின் கட்டுரைகளின் முழுத் தொகுப்பையும் அவரது நாடகங்கள் மற்றும் கவிதைகளின் முழுத் தொகுப்பையும் பதிப்பித்தவர் அ.சதீஷ். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் தொல்காப்பியர் ஆய்விருக்கையின் பொறுப்பாளராக இருக்கும் இவர், நவீன இலக்கியங்களில் மட்டுமின்றி, கல்வெட்டு ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கல்வெட்டு ஆய்வறிஞர் இரா.பூங்குன்றனுடன் இணைந்து சமீபத்தில் திருவண்ணாமலை குன்னத்தூரில் நீர்நிலைக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. காலத்துக்கேற்ற கல்வெட்டுதான்!

டெல்லியில் தமிழ்க் கவிதை!

சாகித்ய அகாடமியின் 70-ஆவது ஆண்டு விழா, பிப்.12 முதல் 17 வரை டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில், தஞ்சை மாவட்டத்திலுள்ள முத்துவீரக்கண்டியன்பட்டியைச் சேர்ந்த வளரும் கவிஞர் ஜே.தமிழ்ச்செல்வன், தமிழ்க் கவிஞர்கள் சார்பில் கவிதை வாசித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். தங்கள் கிராமத்திலிருந்து சென்று, தலைநகரில் கவிதை வாசித்துவிட்டுத் திரும்பிய அவரை, வாணவேடிக்கை முழங்க ரயில் நிலையத்திலிருந்து அழைத்துப்போய், பாராட்டுக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள். ‘‘என் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வு இது” என்று நெகிழ்கிறார் தமிழ்ச்செல்வன்.

அன்பின் பெருவெளி

வைணவ சம்பிரதாயத்தின் பிரிக்க இயலா நிகழ்வுகளாகவே ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியின் ‘வாரண மாயிரம் சூழவ லம்செய்து’, ‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ எனத் தொடங்கும் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒன்றேனும் இடம்பெறாமல் பெரும்பான்மை திருமண அழைப்பிதழ்களைக் காணுதல் அரிது. கட்டற்ற அன்பும், பல்லுயிர் நேசமும், சொல்லாடல் திறனும் கொண்ட ஆண்டாள் குறித்து ‘அன்பின் பெருவெளி ஆண்டாள்’ என்கிற தமிழ் நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெளி ரங்கராஜன். சென்னை, அலையன்ஸ் ப்ரான்சேஸ் அரங்கில் சனிக்கிழமை (3.03.18) அன்று மாலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.

புதுமைத் தேனீ’ -75

சிங்கப்பூர் தமிழர்களிடையே ‘புதுமைத் தேனீ’ என அழைக்கப்படுபவர் தமிழறிஞர் மா.அன்பழகன். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம், திரைக்கதை நூலாக்கம் என படைப்பிலக்கியத்தின் சகல தளங்களிலும் நூல்களை எழுதியிருக்கும் இவர், இயக்குநர் கே.பாலச்சந்தரின் சில படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கு முன்பே, சிங்கப்பூர் சென்று வணிகம் செய்யத் தொடங்கியவர், அங்கே ‘கவிமாலை’ எனும் இலக்கிய அமைப்பினைத் தொடங்கி, 200-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகளையும் நூல் வெளியீடுகளையும் நடத்தியிருக்கிறார்.

அவரது 75-வது அகவையைக் கடந்த மாதம் சிங்கை வாழ் தமிழர்கள் நூல் வெளியீட்டு விழாவோடு வெகு சிறப்பாகக் கொண்டாடினார்கள். அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த பிப்.22, வியாழன் அன்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது

தக்கையின் கண்களில் நான்கு நூல்கள்

தக்கை நடத்தும் நான்கு கவிதை நூல்களின் விமர்சனக் கூட்டம் பிப்ரவரி 25 அன்று, சேலம் அம்மாபேட்டையில் உள்ள சிவகாமி அம்மையார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. க.மோகனரங்கன் நெறியாள்கை செய்யும் இந்நிகழ்வில் ஷாஅ-வின் ‘கண்புகாவெளி’, ஜீவன் பென்னியின் ‘அளவில் மிகச் சிறியவை அக் கருப்பு மீன்கள்’, ஸ்ரீஷங்கரின் ‘திருமார்புவல்லி’, ‘சூரர்பதி கவிதைகள்’ என நான்கு கவிதை நூல்கள் பற்றிய விமர்சனங்கள் இடம்பெறும். ‘சொற்கள்’ சிற்றிதழை பெருமாள் முருகன் வெளியிட, தாமோதர்சந்துருவும் ஜீ.டி.போஸ்கோவும் பெற்றுக்கொள்கிறார்கள்.

கோவையிலிருந்து ஒரு ‘கிளாசிக்’ வரிசை

நவீன இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளையும் சமகாலத்தின் முக்கிய இலக்கியப் படைப்புகளையும் காலச்சுவடு, டிஸ்கவரி புக் பேலஸ், தமிழினி, நற்றிணை போன்ற பதிப்பகங்கள் ‘க்ளாசிக்’ வரிசைகளாக வெளியிட்டுவருகின்றன. கவிஞர் புவியரசுவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இயங்கிவரும் கோவை ‘சப்னா புக் ஹவுஸ்’ பதிப்பகம், காலத்தை வென்ற உலக இலக்கிய வரிசை என்ற தலைப்பில் ‘க்ளாசிக்’ வரிசையை வெளியிடத் தொடங்கியுள்ளது. ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள், கிருஸ்தோபர் மார்லோ எழுதிய ‘டாக்டர் ஃபாஸ்டஸ்’, எச்.ஜி.வெல்ஸ் எழுதிய ‘மாயமனிதன்’, கதே எழுதிய ‘காதல் கனல்’ ஆகிய குறுநாவல்களும் இவ்வரிசையில் இடம்பெற்றுள்ளன. ‘கிளாசிக்’ படைப்புகள் தொடரட்டும்!

தொகுப்பு: ஷங்கர், மு.மு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x