Last Updated : 09 Dec, 2023 06:20 AM

 

Published : 09 Dec 2023 06:20 AM
Last Updated : 09 Dec 2023 06:20 AM

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக கரிசல் இலக்கிய திருவிழா விமரிசையாக தொடக்கம்

விருதுநகரில் நேற்று தொடங்கிய கரிசல் இலக்கியத் திருவிழா 2023-ல் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகன். அருகில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் எழுத்தாளர்கள்.

விருதுநகர்: மாவட்டத்தில் முதன்முறையாக வும், வெகு விமரிசையாகவும் விருதுநகரில் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2023’ நேற்று தொடங்கியது தெற்கத்திச் சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராம நாதபுரம் போன்ற பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கரிசல் நிலமாக உள்ளது. இதையே கதைக்களனாகவும், அங்கு வாழும் மனிதர்களை கதை மாந்தர்களாகவும் கொண்டு, இந்த மக்களின் வாழ்வியலையும், வலிகளையும், சந்தோஷங் களையும் அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழிநடையில், கடந்த ஒரு நூற்றாண்டாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம். கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்கால சந்ததிகளும் அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பில் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2023’ நடத்தப்படுகிறது.

விழாவில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய புத்தக தொகுப்பு அச்சிடப்பட்ட பேனர். இக்கரிசல் இலக்கியத் திருவிழா, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வெகு விமரிசையாக நேற்று காலை தொடங்கியது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்துப் பேசினார். இதில், புக்கர் விருதுக்கான நீளப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளரும், ஜேசிபி இலக்கிய விருதாளருமான பெருமாள் முருகன் தனது சிறப்புரையில் கூறியதாவது: எழுத்தாளர்களுக்கு தமிழ் சமுதாயம் மதிப்பு தருவதில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கி.ராஜநாராயணனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப் பட்டது. இதற்காக, இந்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.

வட்டார இலக்கியம் என்பதற்கும், ‘ரீஜனல் லிட்ரேச்சர்’ என்பதற்கும் வேறுபாடு உள்ளது. வட்டார இலக்கியத்தை மாநில இலக்கியம் என வகைப்படுத்து கிறோம். பல இடங்களில் மொழி திணிப்பு உள்ளதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 வகை நிலங்கள் மட்டுமே உண்டு. பாலை என்ற வகை இல்லை. குறிஞ்சி, மருத நிலங்கள் மழையின்றி காய்ந்து வறண்டு விடும்போது பாலை நிலம் ஏற்படுகிறது. இதேபோல், இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனி காலம், பின்பனி காலம் என 6 வகை காலத்தையும் நாம் அனுபவிக்க முடியும். இதை வட்டார இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வட்டார இலக்கியங்களின் வகைப்பாடு இன்றளவும் தேவைப்படுகிறது. வட்டார இலக்கிய பாகுபாடு 1940-ல் தோன்றியது. நிலத்தின் பின்னணி இல்லாமல் கதையை எழுத முடியாது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் காணொலி வாயிலாக வாழ்த்துரையாற்றினார். சிவகாசி பேராசிரியர் மு.ராமச்சந் திரனின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மேலும், எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமையில் கருத்தரங்கமும், ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் சிறப்பு சொற்பொழிவும், ‘வேரும் விழுதும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் பாமா, அப்பண சாமி, அமுதா, மதுமிதா, சாகித்ய பாலபுரஸ்கார் விருதாளர் கா.உதயசங்கர், சாகித்ய அகாடமி விருதாளர் சா.தேவதாஸ் ஆகியோரும் பேசினர்.

விழாவில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்
கி.ராஜநாராயணன் எழுதிய
புத்தக தொகுப்பு அச்சிடப்பட்ட பேனர்.

அரங்கின் நுழைவாயில் முதல் விழா அரங்கம் வரை எழுத்தாளர் கு.அழகிரிசாமி தொடங்கி, கி.ராஜநாராயணன் (கி.ரா), மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, பா.செயப்பிரகாசம், கழனியூரன், எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், கொ.மா.கோதண்டம், குரங்குடி முத்தானந்தம், ச.தமிழ்ச்செல்வன், ச.கோணங்கி என கரிசல் மண் சார்ந்த 137 எழுத்தாளர்களின் புகைப்படங்கள், அவர்களது வாழ்க்கை குறிப்புகள், எழுதிய நூல்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இன்று (டிச.9) மாலை நடைபெறும் நிறைவு விழாவில், கனிமொழி எம்.பி. பங்கேற்று விழா மலரை வெளியிட்டு பேருரையாற்றுகிறார். வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். மேலும், சிவப்பு யானை நாடகக் குழு வழங்கும் ‘வேள்பாரி’ நாடகமும் நடைபெறுகிறது. கரிசல் இலக்கியத் திரு விழாவில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உட்பட தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x