Last Updated : 17 Jan, 2018 11:29 AM

 

Published : 17 Jan 2018 11:29 AM
Last Updated : 17 Jan 2018 11:29 AM

‘இணைய வம்பு’ மூலமாக நிஜ உலகை கலவரப்படுத்தும் மெய்நிகர் உலகம்: ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவில் நிபுணர்கள் உரை

ணைய வம்பு (‘டிராலிங்’) மூலம் நிதர்சன உலகை மெய்நிகர் உலகம் கலவரப்படுத்துகிறது என்று ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்ச்சியின் ஒரு அமர்வு கவனப்படுத்தியது. டிராலிங்கின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி ஸ்வாதி சதுர்வேதி, குர்மெஹர் கவுர், தீஸ்தா சீதல்வாட் ஆகியோருடன் ‘தி இந்து’ குழும இயக்குநர்களில் ஒருவரான நாராயண் லக்ஷ்மண் இந்த அமர்வில் உரையாடினார்.

முழுநேர வேலை

சமூக ஊடகங்கள் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டிவந்தவலதுசாரி ட்விட்டர் பயனாளிகள் சிலரை அம்பலப்படுத்தியதற்காக, ‘சிக்கியூலர் பிரஸ்ட்டிடியூட்’ (’Sickular Presstitute’) என்று ட்விட்டரில் சாடப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளரும், ‘ஐ ஆம் ஏ டிரால்’ புத்தக ஆசிரியருமான ஸ்வாதி சதுர்வேதி. அவர் பேசும்போது, “தங்களுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் மக்களிடையே பிரிவினையைத் தூண்ட, கால் சென்டர் வேலை போல முழுநேர வேலைக்குப் பாஜகவால் ஆயிரக்கணக்கானோர் பணி அமர்த்தப்பட்டுள் ளனர்.

இவர்கள் ஒரு பக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதையும், மறுபக்கம் தங்களை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களைச் சாடுவதையும் வேலையாகச் செய்துவருகிறார்கள். இதுபோன்ற 45 நபர்களை பிரதமர் மோடி ட்விட்டரில் பின்தொடர்ந்துவருகிறார். உலகின் எந்த நாட்டிலும் தன்னுடைய நாட்டு மக்களைத் துன்புறுத்துபவர்களை ஒரு பிரதமர் இப்படி பகிரங்கமாக ஆதரிப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை” என்றார்.

கடந்துபோக முடியுமா?

“நான் டெல்லி பல்கலைக்கழக மாணவி. ஏபிவிபி-யைக் கண்டு எனக்குப் பயம் இல்லை” என்று எழுதப்பட்ட வாசகத்தை வைத்து ஒளிப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக ‘தேச துரோகி’ என்கிற பட்டத்தில் தொடங்கி, பாலியல் அச்சுறுத்தல்வரை ஆன்லைனில் எதிர்கொண்டுவருபவர் குர்மெஹர் கவுர். அவர் கூறும்போது,

“இதுவெறும் வெர்ச்சுவல்தானே; இது எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் எனப் பலரும் கேட்கிறார்கள். சமூக வலைதளத்தில் ‘எனக்கு முஸ்லிம்கள் பிடிக்கும்’ என்று சமீபத்தில் பதிவிட்ட பெண்ணை ஆன்லைனில் கூட்டம் கூட்டமாகத் தூற்றி அவளைத் தற்கொலைக்குத் தள்ளிவிட்டார்கள். அப்படியிருக்க இது வெறும் ஆன்லைன் என்று எப்படி கடந்துபோக முடியும்?” என்றார்.

தனது மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆன்லைனிலும், நேரடியாகவும் மிரட்டப்பட்டுவருபவர் தீஸ்தா சீதல் வாட்.

அவர் உரையாடும்போது, “சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று நம்பப்பட்டுவருகிறது. ஆனால், தொடர்ந்து சில தலித் செயல்பாட்டாளர்களின் ஃபேஸ்புக் தளங்கள் முடக்கப்படுகின்றன. மறுமுனையில் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெறுப்பு அரசியல் செய்வர்கள் முழு சுதந்திரத்துடன் இயங்குகிறார்கள்.

ஜனநாயகம் இல்லை

ஆக, இந்தியாவில் இணையதளம் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படவில்லை. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவந்து பிரயோஜனம் இல்லை.

அது நம்மைப் போன்ற போராளிகளுக்கு எதிராக மட்டுமே பாயும். மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகளில் டி.எம்.கிருஷ்ணா, குல்சார், அமிதவ குமார், மனு ஜோசப், பாமா, சம்பைய்யா, ஷரண்குமார், மினி கிருஷ்ணன், ஷோபா டே, கே.விஜயகுமார், அம்மு ஜோசப், வ.கீதா, பிரேமா ரேவதி உள்ளிட்டோர் பேசினர்.

மூன்றாம் நாள் அமர்வுகளில் கே.ஸ்டாலின், ஆர்.வி.ரமணி,டி.சந்தானம், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், அனு மஜும்தார், ஜான் பாய்ன், பாரோ ஆனந்த், செபாஸ்டின் ஃபால்க்ஸ், பிரயாக் அக்பர், அட்ரியன் லேவி, ஹேமமாலினி, சாந்தனு சவுத்ரி,வி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x