Published : 16 Jan 2018 09:01 AM
Last Updated : 16 Jan 2018 09:01 AM

இலக்கிய விருந்தின் இறுதி நாள்... ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’

‘தி

இந்து லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கியக் கொண்டாட்டம் கடந்த 14-ம் தேதி பொங்கல் அன்று தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களும் சூடான, சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நேற்றைய சிறப்பம்சமாக விருது வழங்கும் விழாவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆண்டுதோறும் ‘தி இந்து லிட் ஃபெஸ்ட்’ விழாவையொட்டி அளிக்கப்படும் ‘தி இந்து’ இலக்கிய விருது, இந்த ஆண்டு எழுத்தாளர் தீபக் உன்னிகிருஷ்ணன் எழுதிய ‘டெம்ப்ரரி பீப்பிள்’ (Temporary People) நாவலுக்கு அளிக்கப்பட்டது. 2017-ல் வெளிவந்த சுமார் 100 நாவல்களிலிருந்து இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் எழுத்தாளர் செபாஸ்டியன் ஃபால்க்ஸ், ‘தி இந்து’ விருதை தீபக் உன்னிகிருஷ்ணனுக்கு வழங்கினார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு ‘தி இந்து’ பதிப்பாளர் என்.ரவி ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்கினார். அசோகமித்திரனைப் பற்றி ப்ரஸன்னா ராமஸ்வாமி எடுத்திருந்த ஆவணப்படத்தின் முதல் திரையிடல் அரங்கேறியது.

மூன்றாம் நாள் நிகழ்வுகள்

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்சர்ட் ஹால், தி இந்து பெவிலியன், தி இந்து ஷோபிளேஸ் ஆகிய மூன்று அரங்குகளிலும் பல்வேறு அமர்வுகள் இன்று இடம்பெறவிருக்கின்றன. இணைய வம்பு (ட்ராலிங்) பற்றி அதனால் பாதிக்கப்பட்ட குர்மெஹர் கவுர், ஸ்வாதி சதுர்வேதி, டீஸ்டா செடல்வாட் ஆகியோருடன் நாராயண் லட்சுமண் உரையாடுகிறார். நடிகை ஹேமமாலினியைப் பற்றிய நூல் குறித்து ஹேமமாலினினியுடனும் நூலாசிரியர் ராம் கமல் முகர்ஜியுடனும் உரையாடுகிறார் சாந்தனு சௌத்ரி. கலை வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராமுடனும் ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வருடனும் உரையாடுகிறார் சித்ரா மாதவன்.

சிறார் படைப்புகளில் ‘பொலிட்டிக்கல் கரெக்ட்ன’ஸின் பங்கைப் பற்றிய உரையாடலில் அனுஷ்கா ரவிஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். சமூகத்தில் கவிஞரின் இடம்குறித்த அமர்வில் திஷானி தோஷி, ஜீத் தய்யில், சதாஃப் சாஸ் ஆகியோருடன் உரையாடுகிறார் கே.ஸ்ரீலதா. தென்னிந்தியாவைப் பற்றிய உரையாடலில் சார்லஸ் ஆலனும் ஆ.இரா.வேங்கடாசலபதியும் பங்குபெறுகிறார்கள். ஓவியம், கலை குறித்து டி.சனாதனனும் ஏ.எஸ்.பன்னீர்செல்வனும் உரையாடுகிறார்கள். தமிழ் எழுத்தாளர் இமையத்தின் படைப்புகளில் இடம்பெறும் பெண்களைப் பற்றிய உரையாடலில் இமையமும் டாக்டர் ஆர்.அழகரசனும் பங்குபெறுகிறார்கள். ஆவணப்படங் கள் குறித்த உரையாடலில் கே.ஸ்டாலினும் ஆர்.வி.ரமணியும் பங்குபெறுகிறார்கள். இன்னும் கலை, இலக்கிய, பத்திரிகை ஆளுமைகள் கலந்துகொள்ளும் பல்வேறு அமர்வுகள் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. இந்த இலக்கியக் கொண்டாட்டத்துக்கு வாசகர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவைக் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு www.thehindulfl.com என்ற இந்நிகழ்வின் பிரத்யேக இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x