Published : 17 Jan 2018 10:23 AM
Last Updated : 17 Jan 2018 10:23 AM

100-ம் பதிப்பு காணும் ‘தேன்மழை’!

வீனக் கவிதைகள் கோலோச்சும் இந்தக் காலத்திலும் மரபுக் கவிதைகளுக்கு வரவேற்பு குறையவில்லை. உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ்பெற்ற ‘தேன்மழை’ கவிதைத் தொகுப்பு 100-ம் பதிப்பைக் கண்டுள்ளதை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். சொல், பொருளோடு கையாண்ட உவமைகளாலும் கவனம் ஈர்த்தவர் சுரதா. மரபுக் கவிதைகளோடு கவியரங்கம், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். அவரது தேன்மழை கவிதைத் தொகுப்பின் 100-ம் பதிப்பைக் கெட்டி அட்டையுடன் வண்ணத்தாள்களில் 224 பக்கங்களில் ரூ.140/- என்ற மலிவு விலையில் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது நர்மதா பதிப்பகம். இத்தொகுப்பில் 16 தலைப்புகளின்கீழ் சுரதாவின் 90 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

“1970-களில் சேகர் பதிப்பகத்தால் ‘தேன்மழை’ தொகுப்பின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்நூலின் ஒரு பதிப்பை நாங்கள் வெளியிட்டோம். அப்போது சுரதா நம்முடன் இருந்தார். அதற்குப் பிறகும் பல பதிப்புகள் வந்துவிட்டன. சுரதாவே அவரது பதிப்பகம் மூலம் சில பதிப்புகளை வெளியிட்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் கல்லாடன், நூறாவது பதிப்பை நாங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடந்த மாதம் நடந்த சுரதாவுடைய பேரனின் திருமணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல்.திருமாவளவன் இந்தப் பதிப்பின் முதல் பிரதியை வாங்கினார். 100-ம் பதிப்பை மலிவான விலையில், அதே சமயத்தில் சிறப்பாக வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சிகொள்கிறோம்’’ என்கிறார் நர்மதா பதிப்பகத்தின் பதிப்பாளர் டி.எஸ்.ராமலிங்கம்.

100-ம் பதிப்பில் 1,200 பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. மேலும் சுரதாவின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ’சுரதா எனும் கவிதைத் தேன்மழையில் ஏந்திய சிறு கிண்ணம் இது’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது நர்மதா பதிப்பகம். 192 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.40தான். இந்தப் புத்தகத்தை 2,400 பிரதிகள் அச்சிட்டிருக்கிறார்கள். “ஒரு மாதத்துக்குள் ‘தேன்மழை’ தொகுப்பின் 600 பிரதிகள் விற்றுவிட்டன. இன்னொரு தொகுப்பின் 1,000 பிரதிகள் விற்றுவிட்டன. இந்த உற்சாகத்தால் அடுத்துவரும் ஆண்டுகளில் நிறைய கவிதைத் தொகுப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது நர்மதா பதிப்பகம்.

- ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x