Published : 16 Jan 2018 09:26 AM
Last Updated : 16 Jan 2018 09:26 AM

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ விழாவில் இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வாழ்நாள் சாதனையாளர் விருது ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ விழாவில் நேற்று வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், இந்த விருதை மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனுக்குச் சமர்ப்பணம் செய்வதாகத் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் இலக்கியத் திருவிழாவில் ‘தி இந்து’ பதிப்பாளர் என்.ரவி, இந்த விருதை இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கினார். இந்த விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தி இந்து’ இலக்கிய விருது

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவை ஒட்டி ஆண்டுதோறும் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த புனைவு இலக்கியத்துக்கு வழங்கப்படும் ‘தி இந்து பிரைஸ்’ விருது மதிப்புமிக்கது. இந்த ஆண்டு அந்த விருது தீபக் உன்னிகிருஷ்ணன் எழுதிய ‘டெம்போரரி பீப்பிள்’ (Temporary People) நாவலுக்கு விழாவின் இரண்டாம் நாளான நேற்று வழங்கப்பட்டது. 2017-ல் வெளிவந்த சுமார் 100 நாவல்களில் இருந்து, இறுதிப் பட்டியலுக்கு ஐந்து படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அந்தப் பட்டியலிலிருந்து இந்த நாவல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் எழுத்தாளர் செபாஸ்டியன் ஃபால்க்ஸ், தீபக் உன்னிகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினார்.

இதேபோல, சிறார்களுக்கான படைப்பிலக்கிய புத்தகங்களுக்கு ‘தி இந்து - யங் வேர்ல்டு குட் புக்ஸ்’ விருது, எழுத்தாளர்கள் நந்திகா நம்பி (அன்புரோக்கன்), மினி ஸ்ரீநிவாசன் (தி பாய் வித் டூ கிராண்ட் ஃபாதர்ஸ்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும், ‘தி இந்து - யங் வேர்ல்டு குட் புக்ஸ் சிறந்த இல்லஸ்ட்ரேட்டர் விருது’ நான்ஸி ராஜுக்கு (மகராணி தி கவ்) அளிக்கப்பட்டது. சிறந்த படக்கதைப் புத்தகத்துக்கான விருது சித்ரா ராவுக்கு (கான் கிராண்ட்மதர்) வழங்கப்பட்டது. சிறந்த சிறார் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கான விருது தேவிகா கரியப்பாவுக்கு (இந்தியா த்ரூ ஆர்க்கியாலஜி: எக்ஸ்கவேட்டிங் ஹிஸ்டரி) வழங்கப்பட்டது. நடுவர்களின் சிறப்புத் தேர்வாக காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் விவேக் மேனனின் ‘தி சீக்ரெட் லைவ்ஸ் ஆஃப் மேம்மல்ஸ்’ புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x