Last Updated : 15 Nov, 2017 10:25 AM

 

Published : 15 Nov 2017 10:25 AM
Last Updated : 15 Nov 2017 10:25 AM

எமதுள்ளம் சுடர்விடுக! - 16: மறக்கப்படக் கூடாத மாமனிதர்!

 

பெ

ருநிலமான இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியைப் பிரஞ்சியர் ஆண்டார்கள். இந்த உள்ளங்கை ஊரில் இருந்த ஒரு தமிழர் பற்றி 150 ஆண்டுகளுக்கு முன் உலகம் அறிந்திருந்தது. கொண்டாடியது. வணங்கியது. அந்த மனிதர் சவராயலு நாயகர்.

சவராயலு நாயகர், தமிழ் அறிஞர். சமூகச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர். பிரஞ்சு அரசின் அரசவைக் கவி. மக்கள் நலம் என்பது தவிர வேறொன்றைச் சிந்தியாதார். அக்காலத்துப் புரட்சியாளர். தன் காலத்தைத் தாண்டி அடுத்த யுகம் பற்றியும் சிந்தித்தார். வாழும்போதே வாழ்க்கையை வரலாறாக்கிக் கொண்டவர். மாபெரும் மனிதர்களை மறப்பது தமிழர்களின் தனிப்பெரும் குணமல்லவா? ஆனால், கடலூர் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும், முனைவர் ஆ.சுசித்ரா, பேருழைப்பை நல்கி ஆராய்ந்து, ஆவணம் போன்ற புத்தகம் ஒன்றை, ‘புதுச்சேரி சரித்திர நாயகர் சவராயலு’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார். ஓவியா பதிப்பகம் (எண்:1, 4-வது குறுக்குத் தெரு, நடேசன் நகர், புதுச்சேரி- 5) வெளியிட்டுள்ளது.

வறுமை சுமைத்த இளமை

பிரஞ்சியருக்குத் துணையாகத் தானியம் சேகரித்துத் தரும் பணியில் இருந்த செயகான் நாயகர்க்கும் சந்தபாரம்மாளுக்கும் 1829-ம் ஆண்டு, டிசம்பர் 9-ம் நாள் பிறந்தார் சவராயலு. தமிழும் பிரஞ்சும் கற்றார். இளமையில் வறுமையைச் சுவைத்தார். உறவினர் வீட்டில் மாதம் மூன்று ரூபாய் கொடுத்து உணவுண்டு வாழ்ந்தார். தமக்கைக் கணவரும், பாகூர் எனும் ஊரில் தாசில்தார் பொறுப்பில் இருந்தவருமான மாமன் ஆதரவில் வாழ்க்கை யைத் தொடங்கினார்.

புதுச்சேரியின் பகுதிகளில் ஒன்று பாகூர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதன் பெயர் வாகூர். இதன் பொருள் அழகான ஊர் என்பது. மக்கள் அழகைவிட்டு பாகூராக்கினர். கடம்பேரி எனப் பெயர் கொண்ட வாழ்வாதாரம் கொண்ட ஊர். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மகன் நிருபதுங்கன் காலத்தில் இந்த ஊரில் வடமொழிக் கல்லூரி இருந்தமைக்கான ஆதாரம் உள்ளது. (தமிழகத்து மன்னர் கள் ஏன் தமிழ்க் கல்லூரி தொடங்கியதாக வரலாறு இல்லை?) பாகூரையே வாழிடமாகக் கொண்டார் சவராயலு.

தமிழ் கற்க விரும்பினார் அவர். அவர் காலத்தில் மாபெ ரும் தமிழ்ப் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. உ.வே.சா-வின் ஆசிரியர். அக்காலத்தின் பெரும் புலவர்களின் தாய்ப் புலவர் அவர். மாமன் சஞ்சிவீ செட்டியாரிடம் செய்யுளாகவே கோரிக்கைக் கடிதம் எழுதித் தூதனுப்பி இருக்கிறார். பேராசான் அதை ஏற்றார். மீனாட்சி சுந்தரனா ரின் மாணவர் ஆனார். ‘எனக்கு தேம்பாவணி கற்பியுங்கள்’ எனக் கேட்டார். ஒப்புக்கொண்டு முதலில் சில கருவி நூல்களைக் கற்பித்துப் பின்பு தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற நூல்களைப் பொருள் விளக்கம் செய் தார் ஆசிரியர்.

மானுடத்துக்கு எதிரான கூட்டம் ஒன்று புறப்பட்டு, ‘சைவராகிய பிள்ளை, ஒரு கிறிஸ்துவனுக்குப் பாடம் சொல்வதா?’ என்று கேட்டது. பிள்ளை, ஏற்கெனவே கிறிஸ்துவர்களாக சவேரிநாத பிள்ளை, முனுசீப் வேதநாயகம் பிள்ளை, ஞானப்பிரகாசம் பிள்ளை மற்றும் முகமதியர் ஆன குலாம் காதர் நாவலர் ஆகியோருக்குப் பாடம் சொன்ன பிள்ளை சிரித்தார். ‘தமிழ்க் கல்வி என்பது சாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. தமிழ் நூல்களைப் பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் குறுகிய எல்லைக் கோடுகள் விதிப்பது பொருத்தமில்லை’ என்றார்.

நினைவில் வளர்ந்த உறவு

சவராயலு, இலக்கணம் இலக்கியம் பயின்று தேர்ந்தார். தேம்பாவணிப் பிரசங்கியாகப் புகழ்பெற்றார். அவர் பேச்சு, கவிதையாகவே வெளிப்பட்டது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஊடான உறவு மேலானது. பிள்ளையின் மறைவு வரைக்கும் நீண்டது. பிறகும் நினைவில் வளர்ந்தது. மாணவர் பற்றி ஆசிரியர் பிள்ளை, எழுதிய பாடல் அபூர் வ மானவை. பிள்ளையின் மகள் திருமணம், பொருள் முடையால் இடர்படும்போது சவராயலு பெரும் பொருள் காணிக்கை செய்தார்.

1875-ல் நாயகரை அரசவைக் கவிஞரா கக் கவர்னர் திரியார் என்பவர் நியமித்தார். புதுச்சேரிக்கு வரும் கவர்னர்களை வரவேற்றுப் பாட்டிசைப்பது, கவர்னர்கள் விடைபெற்றுச் செல்லும்போதும் கவிதை இயற்றிப்பாடுவது, வரும் பல தேசப் பிரமுகர்களையும் வார்த்தைகளால் வரவேற்பது. துரைமார்களின் திருமண நிகழ்ச்சிகளில் பாடல் இசைப்பது நாயகர் பணி. பிரஞ்சு அலுவலர், மதகுருக்கள், ஆய்வாளர்களுக்கும் தமிழ் கற்பித்தவைத் தம் மகிழ்ச்சிப் பணியாக ஏற்றிருந்தார்.

கவர்னர்களைப் புகழ்ந்து நெகிழ்ந்தவர் இல்லை நாயகர். ஊருக்கு என்ன வேண் டும் என்பதைப் பட்டியலிட்டு, அதுவும் கவிதையிலேயே கேட்டுச் செயல்படுத்திக்கொள்ளும் ஆற்றல்கொண்டவராக இருந்துள்ளார்.

அரசு அதிகாரிகள் செய்த அத்தனைத் தில்லு முல்லுகளையும், தன் ‘வசன கவிதைகளில்’ மிகு சீற்றத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறார். ஆசிரியர் சுசித்ரா அவர்கள் மிக ஆழமாகவும் பொருள் செறிவோடும் நாயகரின் உலகத்தை ஆராய்ந்து இருக்கிறார்.

பாகூரில் இருக்கும் நீதித்தலம், நாயகரின் முயற்சி என்றாலும் அதன் சீரழிவு அவருக்குச் சினம் தருகிறது - பாடுகிறார்:

‘நீதியாசனத்தில் இருக்கும்போதும்/ சாராயம் நெட்டுகின்றான்/ வாதிசாட்சிகள் வாக்குமூலத்தால்/ பொய்யை மெய்யென மதிப்பான்/இலஞ்சம் கொடுக்கும் அவர்கள் பக்கம் சாய்தலே/ இவனுக்கு இயல்பாம்’

- என்று ஒரு நீதிபதி பற்றி ஒரு பாடல்.

பாகூர் ஏரியைச் சுற்றி மரங்களை வெட்டிக்கொண்டு போய் வீடுகட்டும் அதிகாரிகள் பல் விளக்க வேப்பங்குச்சி ஒடிக்கும் மக்கள் மேல் கோந்த்ரவான்சியம் எழுதக் கூறினார்கள் என்கிறார். கோந்த்ரவான்சியம் என்பது குற்றப்பத்திரிகை. இது பிரஞ்சுச் சொல். நாயகர் பாடல்களில் வடசொல் தமிழில் கலப்பது போலக் கலக்கின்றன. அரசு இயந்திரத்தை இந்தளவு விமர்சித்தாலும், பிரஞ்சு அரசு அவர்மேல் தேசப் பாதுகாப்பு வழக்கு போடவில்லை. ஏன்? தேசத்தைக் காப்பவரே கலைஞர்கள் என்பது அக்கால அரசுக்குத் தெரிந்திருக்கிறது.

அப்போஸ்தலிக் ஆசிர்வாதம்

சவராயலு நாயகர் எழுதுவதைப் பிரஞ்சுப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அவரது எழுத்து பிரஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாயகரின் தேம்பாவணி சொற்பொழிவுக்காகப் பலமுறை பாராட்டப்பட்டுள்ளார். கீழ்த்திசை மாநாடு பிரான்ஸ் பாரீசில் நடந்தபோது 1873-ல் அவர் அழைக்கப்பட்டார். பிரஞ்சு அரசு அவருக்குப் பலமுறை தங்கப்பதக்கம் அணிவித்தது. கவர்னர் திரியாத், நாயகருக்கு ‘பொயட் லாரட் ’ பட்டம் அளித்தார். நுண்கலை அமைச்சகம் ‘கல்வி மேதை’ என் றது.

பிரான்சும் மலேசியாவும் இணைந்து உருவாக்கிய இந்தோ - சீனக் கல்விச் சங்கம், நாயகரை இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக்கியது.

1892-ல் போர்ச்சுகீசிய நாட்டில் உருவான கல்விச் சங்கம் அவரை உறுப்பினராக நியமித்தது. போப்பாண்டவர் அப்போஸ்தலிக் ஆசிர்வாதம் அளித்தார். கிறிஸ்துவத்தில் மிகமிக உயர்ந்தவர்களுக்கே அந்த ஆசீர்வாதம் கிடைக்கும். கம்போஜிய நாட்டு அரசர், அவருக்கு ‘ஷெவாலியே’ பட்டம் அளித்தார்.

நாயகர் பெற்ற பட்டங்கள், அவரைப் பற்றி வெளியான பத்திரிகை, புத்தகப் பட்டியலை அனைத்தும் தொகுத்தளித்துள்ளார் சுசித்ரா.

மது ஒழிப்புக்காரராகவும், சாதகத்தை எதிர்ப்பவராகவும் இருந்த நாயகரின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, பெண் கல்விக்காக அவர் செய்த அறிவுக் கிளர்ச்சியாகும். வேதநாயகருக்கும் பாரதிக்கும் முன்பாகப் பெண் கல்வியை உரக்கப் பேசியவர் நாயகர். அதன் காரணமாகவே, அரசு பெண்களுக்கான கல்வி நிலையம் ஏற்படுத்தியது. அவருடைய மகத்தான சாதனை, மாநிலத்தில் பெண் கல்விக்கான திறப்பை ஏற்படுத்தியதாகும்.

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த நாயகர், 1911-ம் ஆண்டு ஜனவரி 30-ல் மறைந்தார். அப்போது அவர் வயது 82. அவரின் திருமதி இராசாம்மாள். 1850-ல் திருமணம். இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள்.

பிரஞ்சுக்காரர்களின் காலனி என்று மட்டும் அறியப்பட்ட புதுச்சேரியை உலகம் தன் மன வரைபடத்தில் வரைந்துகொண்டது சவராயலு நாயகராலேதான். தமிழுலகம் மறந்து கொண்டிருக்கும் ஒரு மாமனிதர் அவர். மறக்கக் கூடாது என்று முனைவர் சுசித்ரா , ஒரு முழுமையான வரலாற்றைத் தந்திருக்கிறார்.

- சுடரும்...
எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x