Last Updated : 04 Nov, 2017 09:58 AM

 

Published : 04 Nov 2017 09:58 AM
Last Updated : 04 Nov 2017 09:58 AM

நூல் நோக்கு: ரஷ்ய இலக்கியப் புரட்சியும் அறிஞர் அண்ணாவும்

சென்னையில் பெய்த பெருமழை யால் வந்த வெள்ளம் என் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. நூலகத்தில் சேமித்து வைத்த புத்தகங்களில் பெரும்பாலானவை நீரில் நனைந்துவிட்டன, மிஞ்சியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்; இன்னும் முறையாக அடுக்கி வைக்கவில்லை. வெளியூர்ப் பயணங்கள் இல்லாத நாட்களில் வீட்டில் இருக்கும் சூழல் அமையும்போதெல்லாம் வீட்டுக்கு வரும் தோழர் களுடன் உரையாடுவதும், வெள்ளத் திடமிருந்து காப்பாற்றி வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பதுமே என் விருப்ப மான நேரங்களாக இருக்கும்.

ஒருநாள், ஓய்வு நேரத்தில் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதிர்பாராமல், ‘ரஷ்ய இலக்கியம்’ என்ற நூலைப் பார்த்தேன். ப.வாணன் எழுதி 1951-ல் வெளியான நூல். ரஷ்யாவில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த எழுத்தாளர்களின் முழுமையான வரலாற்றுக் குறிப்புகளுடன், படைப்புகளின் விவரங்களும் அந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய இலக்கியத்தின் தந்தை அலெக்ஸாண்டர் புஷ்கின் 1799-ல் பிறந்தவர். அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் லெர்மாண்ட்வ், கோகோல், பிலின்ஸ்கி, துர்கனிவ், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செக்காவ், கார்க்கி ஆகிய 9 பேரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்; இவர்களைப் பற்றிய அரிய கருத்துக்களை இந்தச் சிறிய நூலில் எழுதியிருக்கிறார் ப.வாணன். நூலைப் படிக்கத் தொடங்கியதும் இடையில் நிறுத்த முடியாமல் முழுவதும் படிக்கத் தூண்டியது. இந்நூலுக்கு அறிஞர் அண்ணா அணிந்துரை வழங்கியிருக்கிறார். அந்த அணிந்துரையின் தலைப்பே, ‘அண்ணா வின் அன்புரை’ என்றிருந்தது.

இந்த நூலைப் படித்து முடித்ததும், மாமேதை கார்ல் மார்க்ஸின் தோழரும் மாபெரும் சிந்தனையாளருமான எங்கல்ஸின் கருத்து என் நினைவுக்கு வந்தது.

ரஷ்ய எழுத்தாளர்களின் இலக்கியங்களைப் படித்த எங்கல்ஸ், ரஷ்யாவில் மிகப் பெரிய புரட்சி ஏற்படுவதற்கான சிந்தனைப் போக்குகள் தென்படுவதாகக் கருதினார். ரஷ்ய இலக்கியங்களை மூல மொழியிலேயே படிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில், தனது 56-வது வயதில் ரஷ்ய மொழியை எங்கெல்ஸ் படிக்கத் தொடங்கியதாகத் தகவல் உள்ளது.

ப.வாணன் எழுதிய ‘ரஷ்ய இலக்கியம்’ நூலுக்கு அண்ணா எழுதியிருக்கும் அணிந்துரையில், “ரஷ்ய இலக்கியம், மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம்பெற்ற ‘பேனாதூக்கி’ தந்த களிப்புப் பானம் அல்ல! பசியுடனும் பட்டினியுடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காக தீட்டப்பட்ட திருவாசகம்!

மலரிலிருந்து தயாரிக்கப்பட்ட வாசனைத் தைலத்தை, வண்ணக் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட அழகிய மலரில் தெளித்து, பயன் என்ன காண முடியும்! அதுபோலவே, அறிவுத் தெளிவும் கற்பனைத் திறமும் கொண்ட அறிஞர்கள், இலக்கியம் தீட்டி, அதனை நுகரவோ, நுகர்ந்து பெற்ற பயனைப் பெருக்கவோ வலிவற்ற ஒரு கூட்டத்திடம் நீட்டி என்ன பயன்!

04chdas_nallakannu-russiaright

‘ரஷ்ய இலக்கியம்’ – புதியதோர் எழுச்சியை ஊட்டிற்று; அதனைப் பயன்படுத்தி, புதியதோர் உலகு எழச் செய்தனர், அந்த இலக்கியத்தால் விழிப்புற்றவர்கள். ரஷ்ய இலக்கியம் ரஷ்யப் புரட்சிக்கு வழிகோலிற்று. வெற்றிபெற்ற ரஷ்ய புரட்சி, ரஷ்ய இலக்கியத்திற்கு உயரிய இடம் கிடைத்திடச் செய்தது” என்று எழுதியிருக்கிறார். இலக்கியங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட வர்க்க புரட்சி பற்றி இந்த அணிந்துரையில் பெருமிதத்தோடு குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த நூலுக்கு அண்ணா தீட்டிய அணிந்துரையும் சிறப்பாக அமைந்ததில் வியப்பென்ன! இந்த நூலை எப்போது கையில் எடுத்தாலும், ’மீண்டும் மீண்டும் என்னைப் படி’ என்று தூண்டிக்கொண்டேயிருக்கிறது. ஒரு நல்ல புத்தகம் என்பது இப்படித்தானே இருக்க முடியும்! 1951-ல் எழுதப்பட்ட இந்நூலை என்.சி.பி.ஹெச். நிறுவனம் 2012-ல் மறுபதிப்பு செய்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூலிது என்பேன்.

-ஆர்.நல்லகண்ணு, மூத்த தலைவர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x