டீன்களின் மனநலனுக்கு ‘சமூக ஊடகத் தடை’ உகந்ததா? - ஆய்வுகள் காட்டும் மாற்று வழிகள்!

டீன்களின் மனநலனுக்கு ‘சமூக ஊடகத் தடை’ உகந்ததா? - ஆய்வுகள் காட்டும் மாற்று வழிகள்!
Updated on: 
3 min read

“என் பிள்ளை எந்நேரமும் போனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்... யாரிடமும் சரியாக பேசுவதில்லை” - இன்று பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும் பெற்றோரின் கவலை கலந்த ஆழ்மன வேதனை இது.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சமூக ஊடகத் தடைகளை விதிக்கத் துடிக்கும் பெற்றோருக்கும், அந்தத் தடைகளை மீறி ஆன்லைன் உலகுக்குள் மூழ்கும் பிள்ளைகளுக்கும் இடையே தினசரி நடக்கும் உளவியல் யுத்தமே இன்றைய பல குடும்பங்களின் நிதர்சனம்.

நம் பிள்ளைகள் ஸ்மார்ட்போன் திரைக்குள் ஒளிந்திருக்கும் மாய உலகில் தங்கள் பொன்னான நேரத்தையும் மன நிம்மதியையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித மூளையின் ‘டோபமைன்’ சுரப்பியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சமூக ஊடக அல்காரிதம்கள் (Algorithms), இளைஞர்களை ஒரு கனவுச் சிறைக்குள் தள்ளியுள்ளன.

சமூக ஊடகங்கள் தரும் போலியான ‘லைக்’குகளை விட, பெற்றோரின் அன்பும் பாராட்டும்தான் அவர்களின் வாழ்க்கையை அழகாக்கும். இதிலிருந்து மீள என்ன மாதிரியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஆய்வுப் பார்வையில் அறிவோம்.

சமூக ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுகளும் நடவடிக்கைகளும்

மார்ச் மாதம் முதல் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா போன்ற சமூக ஊடக நிறுவனங்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் தங்கள் தளங்களை வேண்டுமென்றே வடிவமைத்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் 1,700 கோடி டாலருக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தியுள்ளன.

பல்வேறு நாட்டு அரசுகளும் மக்களும் சமூக ஊடகத் தளங்களை ‘எவ்வாறு பார்க்கத் தொடங்கியுள்ளனர்’ என்பதற்கு இந்த வழக்குகள் ஒரு சிறந்த அறிகுறியாகும்.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் முதல், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா. அதைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, கிரீஸ், இந்தோனேசியா, மலேசியா, போர்ச்சுக்கல், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதேபோன்ற தடைகளை விதித்துள்ளன. இந்தத் தடைக்கான பிரதானக் காரணமாக, சிறார் மனநலப் பாதுகாப்பே குறிப்பிடப்படுகிறது.

மனநலன் குறித்த பிரச்சனைகளும்ஆய்வுகளும்

2024-ம் ஆண்டில் ஜொனாதன் ஹைட் ‘தி ஆங்ஸியஸ் ஜெனரேஷன்’ (The Anxious Generation) எனும் நூலை எழுதியிருந்தார். அந்த நூலில் ஹைட் முக்கியமாகக் குறிப்பிடுகையில், “சமூக ஊடகங்கள் குழந்தைகளின் சமூக மற்றும் நரம்பியல் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. மேலும், தூக்கமின்மை, கவனச்சிதறல், அடிமையாதல், தனிமை, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் (Comparison) மற்றும் குறையில்லாமை (Perfectionism) ஆகியவற்றின் மூலம் பதற்றமும் மனச்சோர்வும் அதிகரிக்கக் காரணமாகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

‘சமூக ஊடகத் தடை’ பலன் அளிக்குமா?

சமூக ஊடகங்களை அரசு அல்லது குடும்ப அளவில் முழுமையாகத் தடை செய்வது உடனடித் தீர்வாகாது என்பதே நவீன உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளின் கருத்தாகும்.

எதிர்மறை உளவியல் தூண்டல்:

பிள்ளைகளுக்கு ஒரு விஷயத்தைச் “செய்யக்கூடாது” என்று முற்றிலும் தடை செய்யும்போது, அவர்களுக்கு அதைச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.

ரகசியப் பயன்பாடு:

முழுமையான தடை விதிக்கப்படும்போது, பிள்ளைகள் போலிக் கணக்குகள் (Fake Profiles) அல்லது விபிஎன் (VPN) மூலமாகப் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். இதனால் ஆன்லைனில் ஆபத்துகள் நேரிடும் போது, பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் உதவி கேட்கப் பயப்படுகிறார்கள்.

பயனுள்ள பக்கங்கள் மறுக்கப்படுதல்:

முழுமையான தடை மூலம், மாணவர்கள் கல்வி சார்ந்த தகவல்கள், நேர்மறையான சமூகக் குழுக்கள் மற்றும் படைப்பாற்றல் பகிர்வுகளையும் இழக்க நேரிடுகிறது.

தடையின் உண்மையான பலன்:

முற்றிலும் தடை செய்வதற்குப் பதிலாக, ‘நேரக் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய பயன்பாடு’ மட்டுமே அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கத்தை உருவாக்கும்.

மனநலப் பாதிப்புடன் என்ன தொடர்பு?

அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற சமூக ஊடகப் பயன்பாட்டுக்கும் இளம் தலைமுறையினரின் மனநலப் பாதிப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை பல்வேறு சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

டோபமைன் சுழற்சி: சமூக ஊடகங்களில் கிடைக்கும் ‘லைக்’குகள் (Likes), ‘ஷேர்’கள் மற்றும் ‘கமெண்ட்’டுகள், மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொருளைச் சுரக்கச் செய்கின்றன. இது போதைப்பொருளுக்கு அடிமையாவது போன்ற ஓர் உடனடி மகிழ்ச்சிச் சுழற்சியை உருவாக்கி, மீண்டும் மீண்டும் பயன்பாட்டைத் தூண்டுகிறது.

சமூக ஒப்பீடு:

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உடல் தோற்றத்தையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு, தாழ்வு மனப்பான்மைக்கும் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள்.

அச்ச உணர்வு:

நண்பர்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளாவிட்டால் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற பதற்றமே மாணவர்களிடம் மேலோங்குகிறது.

தடையால் கட்டுப்படுத்த முடியுமா?

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை கொண்டுவந்த பிறகும்கூட , 12-ல் இருந்து 15 வயது வரையிலான குழந்தைகளில் சுமார் 61% பேர் போலியான முகவரிகள், ஏஐ புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விபிஎன் (VPN) ஆகியவற்றைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆகையால், முழுமையான தடைக்கு பதிலாகச் சரியான கட்டுப்பாடுகளை விதிப்பதே சிறந்தது என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். நேரக் கட்டுப்பாடு , நோட்டிபிகேஷனுக்குத் தடை, செல்போன் இல்லாத பகுதி போன்றவற்றை உருவாக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

எது நல்ல பலன் தரும்?

மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு என்பது முற்றிலுமான சமூக ஊடகத் தடையால் சாத்தியமாகாது. மாறாக, குடும்ப உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமூக ஊடகங்களைத் முற்றிலுமாகத் தடை செய்வதற்குப் பதிலாக, ‘இயல்பான பாதுகாப்பு’ (Default Secure) முறைகளை அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும். இது குழந்தைகளின் மனநலத்தைப் பாதுகாக்கச் சிறந்த வழியாக இருக்கும்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு முன்மாதிரியாகப் பெற்றோர் நடந்துகொள்ளுதல், நட்பாகப் பழகுதல், மாற்றுப் பொழுதுபோக்கு அம்சங்களை அளித்தல், மற்றும் ‘சைல்ட் லாக்’ (Child Lock) போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதித்தல் அவசியமானதாகும்.

இறுதியாக, இணையத்தில் தங்களுக்கு எது சிறந்தது என்பது குறித்த உரையாடல்களில் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பரிந்துரைக்கிறது.

இதன் அர்த்தம், குழந்தைகளிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, மாணவர்கள் எவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள், இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் என்ன பெறுகிறார்கள், எதனால் அவர்களால் ஸ்க்ரீன் மீது அடிமையாகிறார்கள் என்பதை அறியலாம்.

சமூக ஊடகத் தளங்களிலும் கல்வியிலும் மாற்றங்களைக் கொண்டுவர இவை உதவும். இதுவே இளம் தலைமுறைனரின் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், ஆரோக்கியமான உருவாக்கவும் வழிவகுக்கும்.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்

டீன்களின் மனநலனுக்கு ‘சமூக ஊடகத் தடை’ உகந்ததா? - ஆய்வுகள் காட்டும் மாற்று வழிகள்!
டெல்லியில் போராடிய பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீஸாருக்கு எதிராக பேரணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in