

சில வாரங்களுக்கு முன்னர் லிங்க்ட்இன் பக்கத்தில் நொய்டாவைச் சேர்ந்த நிறுவனர் நிதின் வர்மா தனது நிறுவனத்துக்கான ஆட்சேர்ப்பு அனுபவத்தைப் பகிர்ந்தார்.
அதில் அவர், “சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இளைஞர் என்னிடம், “சார், எனக்கு அன்றாடம் மதியம் 30 நிமிடங்கள் தூங்க அனுமதி வேண்டும். அது எனது பணித்திறனை அதிகரிக்கும்” என்று கோரிக்கை வைத்தார். அவர் அந்தக் கோரிக்கையை எவ்விதச் சலனமுமின்றி முன்வைத்தார். அந்தக் கோரிக்கையைக் கேட்டதும் ஒருவர் வெடித்துச் சிரித்துவிடும் அளவுக்கு அவரது குரல் வேடிக்கையாக இல்லை. மாறாக, பணியில் சேரும் முன் ஊதிய விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது எத்தகைய நேர்த்தியை ஒருவர் கடைப்பிடிப்பாரோ, அத்தகைய தொழில் நேர்த்தியோடு இருந்தது.
முதலில் அந்தக் கேள்வி எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அத்துடன் நேர்காணலை நிறுத்திக் கொள்ளலாம் என்றுகூட சில விநாடிகள் யோசித்தேன். ஆனால் அந்த இளைஞருடைய நேர்மையும், துணிச்சலும், வாக்குறுதியும் நேர்காணலை தொடரச் செய்தது.
அவருடைய திறமைகளை மதிப்பிட்ட பின்னர் அவரிடம் நான், “உங்கள் தூக்க நேரம் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எனக்கு வேலை சரியாக நடக்க வேண்டும். வேலை துல்லியமாக முடிந்தால், உங்களது பணி நேரம் பற்றி நான் கணக்கு வைக்கப்போவதில்லை. ஆனால், வேலையை முடிக்காவிட்டால், உலகில் எந்தத் தூக்கமும் உங்களைக் காப்பாற்றாது” என்று கூறியதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. கூடவே, ஜென்ஸீ தலைமுறையினர் வேலையை அணுகும் முறை மீதான நிதின் வர்மாவின் பார்வையும் வைரலானது.
“காலங்காலமாகவே பணியிடத்தில் ஒருவர் எத்தனை மணி நேரம் அவரது மேஜையில் செலவிடுகிறார் என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஆனால் ஜென்ஸீக்கள் தாங்கள் எவ்வாறு பணி செய்கிறோம் என்பதன் மூலம் தங்கள் உழைப்பை அளவிடக் கோருகின்றனர். இது புதிய பார்வை. என்றாலும், ஜென்ஸீக்களின் எல்லா கோரிக்கைகளுமே நியாயமானதாக இருக்க முடியாது” என்று நிதின் வர்மா கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில், பணியிட இயக்கவியல் சூழலை ‘மாற்றி யோசிக்கும்’ Gen Z-க்கள் பற்றிய சுவாரஸ்யக் குறிப்புகளைப் பார்ப்போம்.
இன்டர்வியூவ் அன்றும் இன்றும்!
கதையிலோ, திரையிலோ வேலைக்கான இன்டர்வியூ காட்சிகளை நாம் கடந்து வந்திருப்போம். இன்டர்வியூ செல்லும் ஆணாக இருந்தால் அயர்ன் செய்து டக் இன் செய்யப்பட்ட சட்டை, பெண் என்றால் காட்டன் புடவை, சல்வார், படிய வாரப்பட்ட தலை பின்னல் என்று உருவகப்படுத்தப்பட்டிருந்ததே நம் நினைவுக்கு வரும்.
இன்றளவும் கூட பெரும்பாலானோர் ட்ரெஸ் கோடை குறைந்தபட்சமாவது கடைப்பிடிப்பது உண்டு. ஆனால், வேலைதேடும் ஜென்ஸீ தலைமுறையினர் சிலர், வழக்கமான ஆடைக் கட்டுப்பாடுகளை விடுத்து கையில் கோல்ட் காஃபியுடன் வருவதும், கேள்விகளுக்கு நடுவே அதைக் கொஞ்சம் குடித்துவிட்டு பதில் சொல்லும் போக்கும் ஐடி, ஃபினான்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படுவதாக வேலைவாய்ப்புச் சந்தையின் அண்மையப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஜென்ஸீக்களின் இந்தப் போக்கு பற்றி சமூக வலைதளங்கள் தொடங்கி செய்தி ஊடகங்கள் வரை பேச ஆரம்பித்துவிட்டன. ஆன்லைன் சர்வேக்கள் கூட நடத்தப்பட்டு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதன் அடிப்படையில், மில்லனியல்கள் அதிக உழைப்பு, ஓய்வற்ற வேலை மற்றும் ஒரு வேலையை முடிக்க வழக்கமான பணி நேரத்தைத் தாண்டியும் பணி செய்தல் போன்ற மனநிலையுடன் இருக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் ஜென்ஸீ தலைமுறையினர் பெரும்பாலும் மன அமைதிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆட்சேர்க்கை நிறுவனத்தின் தலைவர் டிக்டாக் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு ஜென்ஸீ இளைஞர் ஐஸ்ட் காப்பியுடன் நேர்காணலுக்கு வந்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஜென்ஸீ தலைமுறையினர் வேலைக்கான நேர்காணலுக்கு இப்படித்தான் வருகின்றனர். ஜென்ஸீக்களுக்கு இன்டர்வியூ என்பது அவர்களுடைய அன்றாட வேலைகளின் ஊடே ஒரு நிகழ்வு போன்றது மட்டுமே. அதற்கான தனி மெனக்கிடல்களை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை” என்று விமர்சித்திருந்தார்.
ரூல் புக்கை மாற்றும் ஜென்ஸீக்கள்:
இத்தகைய விமர்சனங்கள் உலகெங்கும் வலுத்துவரும் நிலையில் பணியிடத்தில் ஜென்ஸீக்கள் புதிய ரூல் புக்கை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாம். அது நிச்சயமாக முந்தைய தலைமுறை மேலதிகாரிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டக் கூடியவதாகவே இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கு இல்லை. ஜென்ஸீக்கள் பாஷையிலேயே குறிப்பிட்டால் பணியிட இயக்கவியலில் நிலவும் இந்தத் தலைமுறை இடைவெளி ‘ரேஜ் பைட்’-களை அதிகப்படுத்துகிறது எனலாம்.
இது தொடர்பான அனுபவத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் 36 வயதான மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர்.
“பல நேரங்களில் நேர்காணலுக்கு சரியாக 5 நிமிடங்களுக்கு முன்னர், ‘இன்றைய நேர்காணலை தள்ளிவைக்க முடியுமா?’ எனக் கோரி மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அதற்கான காரணமும் மிகச் சாதாரணமாகவே இருந்திருக்கின்றன.
முதலில் இது வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், ஜென்ஸீக்களின் இதுபோன்ற தெளிவான எதிர்பார்ப்புகள் பணியிடத்தின் இயல்பான ஒரு பகுதியாக மாறி வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
“ஜென்ஸீக்கள் பணியிடங்களில் தங்களின் சிரமங்களை வெளிப்படையாகப் பேசுவது என்பது சிரமங்களுக்கு இடையே அந்தப் பணியைச் செய்வதைவிட மிகவும் எளிதானது என்று கருதுகின்றனர். இத்தகைய வெளிப்படைத்தன்மை பணியிடத்தில் ஊழியர்கள் - மேலதிகாரிகளுக்கு இடையே நிலவுக்கூடிய தொடர்பில் ஓர் ஆரோக்கியமான போக்கு. முந்தைய தலைமுறையினரிடம் இது இருந்ததில்லை” என்று சில மில்லனியல், ஜென் எக்ஸ் ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை, உட்கட்டமைப்பு வசதிகளின் அசுர வளர்ச்சி, கார்ப்பரேட் இருப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட பொருளாதார மையங்கள் கொண்ட முக்கிய பெருநகரங்கள் தான் டயர் 1 நகரம். சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே இந்தியாவின் சில டயர் 1 நகரங்கள்.
இந்தியாவில் உள்ள டயர் 1 நகரங்கள், ஜென்ஸீ இளைஞர்களின் புதிய ரூல் புக்குக்கு வெகுவாகவே இடம் கொடுப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.
இருந்தாலும், பணியிடத்துக்கும், செய்யும் வேலைக்குமான தொழில்முறைத் தோற்றம், சுகாதாரம், அடிப்படைப் பண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக புறக்கணித்துவிடமுடியாது என்கிறார் டயர் 1 நகரங்களில் ஒன்றான புனேவைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசகர் ஒருவர்.
இமோஜிக்கள், ‘கோஸ்டிங்’ இன்னும் பல...
விநோத கோரிக்கைகள், ஆடைக் கட்டுப்பாடு மட்டுமல்ல, ஜென்ஸீக்கள் பணியிடங்களில் செய்யும் இன்னும் சில ‘சேட்டைகளும்’ அதிர்ச்சியைத் தருவதாக நிறுவனத் தலைவர்கள் சிலர் பட்டியலிடுகின்றனர்.
பணிக்காக விண்ணப்பித்த நபர் ஒருவர் ஊதிய விவகாரம் குறித்து அனுப்பிய மெயிலில் ஒரு ரோஜாப்பூ கவிழ்ந்திருப்பது போன்ற இமோஜியை அனுப்பியதாகக் கூறும் பெருநிறுவன சிஇஓ, இதுபோன்ற இமோஜிக்களை முதிர்ச்சியற்றப் போக்காகவே பார்க்கிறேன் என்கிறார்.
இமோஜிக்கள் இம்சை இப்படியென்றால் ‘கோஸ்டிங்’ வேறு கதை. ஜென்ஸீக்களை பணியமர்த்தும் நடைமுறையிலும், பல்வேறு படிநிலைகளிலும் எந்தத் தகவலும் சொல்லாமல் விலகிச் செல்லும் நிலை நிலவுவதாகவும் நிறுவனங்கள் பல குற்றஞ்சாட்டுகின்றன. காதலில் மட்டுமல்ல வேலையிலும் கோஸ்டிங் (Ghosting) வந்துவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது சிலர் நேர்காணலை உறுதி செய்வதில்லை. சிலர் பணியில் சேர உறுதி அளித்துவிட்டு அதற்கான நாளில் பணிக்கு வருவதில்லை. முன்பெல்லாம் வேலை வாய்ப்பை நிராகரித்தால் கூட முறையாக தெரிவிக்கும் போக்கு இருந்தது. இப்போது அத்தகைய தொழில்முறை பணிவு தேவையற்ற உணர்ச்சி வெளிப்பாடாக ஜென்ஸீக்களால் பார்க்கப்படுகிறது.
வரவேற்பும் எதிர்ப்பும்..
ஜென்ஸீக்களின் இந்தப் போக்கு சில இடங்களில் வரவேற்பும், பல இடங்களில் கடுமையான எதிர்ப்பும் சந்தித்து வருகிறது.
“வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை பரவலாக பல நாடுகளிலுமே காணப்படுகிறது. இத்தகைய சூழலில் இதுபோன்ற கலாச்சாரம், தகுதியிருந்தும் சில தேவையற்ற பழக்கங்களால் வேலையில்லாத நிலையை உருவாக்கும் என்று வேலைவாய்ப்பு கன்சல்டன்ட்டுகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தங்கள் இஷ்டப்படி, இஷ்டப்பட்ட நேரத்தில் வேலை செய்து கொள்ளும், போக்கினால் பெரிய லட்சியங்கள் இல்லாது ‘கிக்’ பணியாளர்களாக ஒரு பெருங்கூட்டம் உருவாகும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
வேலைவாய்ப்பின்மை போலவே, தகுதிக்குக் குறைவான வேலையை இளைஞர்கள் செய்வதும் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம்” என்கிறது நிறுவன சிஇஓ-க்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் தரப்பு.
காலம் மாறலாம், ஆனால் சில அடிப்படைப் பண்புகள் தலைமுறை தாண்டியும் நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், “ஜென்ஸீக்கள் கோரிக்கைகள், கேள்விகள் எல்லாம் அவர்களின் குறைந்த அர்ப்பணிப்பின் வெளிப்பாடு அல்ல. அவர்களை நிறுவனங்கள் மதிப்பிடுவது போலவே, அவர்களும் நிறுவனங்களை மதிப்பிட முயல்கின்றனர். மில்லனியல்கள், ஜென் எக்ஸ் தலைமுறையினர் மனக்குமுறலாக வைத்திருப்பதை ஜென்ஸீக்கள் வெளிப்படையாகச் சொல்கின்றனர். அவர்கள் வகுக்கும் எல்லைகள் பொறுப்பின்மை, திறமையின்மை அல்ல. அவை அடிப்படை எதிர்பார்ப்புகள், சுதந்திரங்கள். அதை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். இதை ஜென்ஸீக்களுக்கு மட்டுமல்ல மில்லனியல், ஜென் எக்ஸ் ஊழியர்களுக்கும் சேர்த்தே விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நல்ல திறமைசாலிகளை இழக்க நேரிடும்,” என்றும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.
இப்போது ஜென்ஸீக்கள் வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நிறுவன மேலாளர்கள், உரிமையாளர்கள், சிஇஓ-க்கள் இன்னும்பிற உயர் பதவிகளை அலங்கரிக்கும்போது பணியிட இயக்கவியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.