சவால்களுடன் வாழும் ‘ஆட்டிசம்’ குழந்தைகளின் பெற்றோர் - சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்குமா அரசு?

சவால்களுடன் வாழும் ‘ஆட்டிசம்’ குழந்தைகளின் பெற்றோர் - சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்குமா அரசு?
Updated on
2 min read

மதுரை: உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, உலகளவில் சுமார் 100 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசம் பாதிப்புடன் வாழ்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் ஆட்டிசம் கண்டறியப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்குக் காரணம் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், ஆரம்பகால பரிசோதனைகள், மேம்பட்ட கண்டறிதல் முறைகள் மற்றும் சுகாதார சேவைகளின் விரி வாக்கம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்டிசம் என்பது நோய் அல்ல, நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கு சமூகத் தொடர்பு, மொழித் திறன், நடத்தை, உணர்வு செயலாக்கம், கற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கைத் திறன்களில் பல்வேறு அளவுகளில் சவால்கள் உள்ளன.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அதிக சத்தம், அதிக வெளிச்சம், புதிய சூழல் போன்றவை ஆட்டிசம் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இந்த சூழலில் ஆட்டிசம் (Autism Spectrum Disorder) கொண்ட குழந்தைகளை சிறப்புத் திரைப்படக் காட்சிகளுக்கு அழைத்துச்செல்ல தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்க சமூகநல முயற்சியாகும் என்று சுகாதார செயற்பாட்டா ளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்க மாநிலத் தலைவர் வெ. கிருஷ்ணகுமார் கூறியதாவது: ஆட்டிசம் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட திரைப்படக் காட்சிகளை ஏற்பாடு செய்வது, அவர்களின் சமூக இணைப்பை மேம்படுத்தும் சிறந்த முயற்சி ஆகும்.

இது மட்டும் போதாது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை எளிதில் பெற முழுவதும் கட்டமைப்பு வசதிகள் உருவாக்க வேண்டும். தமிழக அரசு, ஒவ்வொரு தாலுகாவிலும் ஆரம்பகால தலையீட்டு மையங்களை நிறுவ வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சி மதிப்பீடு, குழந்தை நல மருத்துவர், இயன்முறை மருத்துவர், தொழில்வழி சிகிச்சையாளர், பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர், உளவியலாளர், சிறப்புக் கல்வியாளர், நடத்தை சிகிச்சை நிபுணர், ஊட்டச்சத்து ஆலோசகர் உள்ளிட்ட சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பல்துறை சேவை முறை உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்காக காத்திருக்காமல், அரசே வீடு தேடி மதிப்பீடு செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு நெகிழ்வான பணி நேரம், பராமரிப்பாளர் விடுப்பு, தேவைக்கேற்ப வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பு, சிகிச்சைச் செலவுகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் காப்பீடு பாதுகாப்பு மற்றும் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு சேவை திட்டங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை நாமும் செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டிசம் குழந்தைக்கும் தரமான சிகிச்சை, சமமான கல்வி, சமூகத்தில் மரியாதையுடன் வாழும் வாய்ப்பு மற்றும் அவர்களின் முழுமையான திறனை வெளிக்கொணரும் சூழல் உருவாக்கப்படும் போதுதான் உண்மையான அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சவால்களுடன் வாழும் ‘ஆட்டிசம்’ குழந்தைகளின் பெற்றோர் - சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்குமா அரசு?
“அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையில் நடைபெறும்” - அமைச்சர் ரமேஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in