மாணவர்களின் கவனத்திறனை வளர்க்கும் யோகா!

ஜூன் 21 - உலக யோகா நாள்
மாணவர்களின் கவனத்திறனை வளர்க்கும் யோகா!
Updated on
4 min read

இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகப்படியான பாடச்சுமை, திறன்யோகாபேசி பயன்பாடு, தொடர்ச்சியான தேர்வுகள் காரணமாகப் பள்ளி மாணவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.

ஒரு மாணவர் படிக்கும்போது திணறுவதாகவோ, பதற்றமாகவோ உணரும்போது, அவர்களின் சுவாசம் வேகமாகவும் மேலோட்டமாகவும் மாறுகிறது. இது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரித்து, கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. இதற்கு நடைமுறைத் தீர்வை யோகா வழங்குகிறது. உடலின் சரியான சீரமைப்போடு முறையான சுவாசத்தை இணைப்பதன் மூலம், தங்களின் பதற்றமான மனநிலையை மாற்றி, ‘விழிப்புணர்வுடன் கூடிய அமைதி’ நிலையை மாணவர்கள் அடைய முடியும்.

குறிப்பிட்ட சில யோகாசனங்கள் சிதறிய ஆற்றலை ஒன்றுதிரட்டி, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன. புத்தகங்களை எடுத்து மாணவர்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன், இந்த எளிய ஆசனங்களில் சிலவற்றைச் செய்தால் மனத்தெளிவு கணிசமாக அதிகரிக்கும்.

மனதை நிலைநிறுத்தும் ஆசனங்கள்:

பாலாசனம்: இந்த எளிய ஓய்வு நிலை ஆசனம், உங்களின் சுறுசுறுப்பான நரம்பு மண்டலத்தை உடனடியாக அமைதிப் படுத்துகிறது. இது வெளி உலகப் பிரச்சினைகளில் இருந்து மனதிற்கு ஒரு தற்காப்புக் கவசத்தை உருவாக்கி, படிப்பதற்கான மனநிலைக்கு உங்களை மெதுவாக அழைத்துச் செல்கிறது.

சுப்த பத்த கோணாசனம்: நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் உடல் சோர்வை நீக்கும் மிகச் சிறந்த ஆசனம் இது. இடுப்பு, நெஞ்சுப் பகுதியைத் தளர்த்தி, அடி வயிற்று சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இதனால் உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு குறைகிறது.

கூர்மையான கவனத்திற்கான ஆசனங்கள்: உடலைச் சம நிலையில் வைக்கும் ஆசனங்கள் உங்களின் கவனத்திறனைக் காட்டும் கண்ணாடி. வரவிருக்கும் தேர்வுகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றியோ உங்கள் மனம் சிந்திக்கத் தொடங்கினால், நீங்கள் உடனடியாக உடல் சமநிலையை இழப்பீர்கள். எனவே, இந்த ஆசனங்களுக்கு முழுமையான கவனம் தேவை.

விருக் ஷாசனம்: உங்களின் பார்வையை உங்களுக்கு முன்னால் உள்ள அசையாத ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவதன் மூலம், இந்த ஆசனம் சிதறிய எண்ணங்களை ஒருங்கிணைத்து, மனதிற்கு ஒருமுகத் தன்மையைத் தருகிறது. மேலும், வெளி உலகக் கவனச்சிதறல்களை எதிர்க்க மூளைக்குப் பயிற்சி அளிக்கிறது.

வீரபத்ராசனம்: இந்தத் தீவிரமான, ஆற்றல்மிக்க ஆசனம் உடலையும் மனதையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது. உடல் வலிமை யையும் மன உறுதியையும் உருவாக்குகிறது.

நடராஜாசனம்: இந்த ஆசனத்திற்கு நேர்த்தியான உடல் ஒருங்கிணைப்பும் அடிவயிற்றுத் தசைகளின் வலிமையும் தேவை. உங்கள் நெஞ்சுப் பகுதியை விரிவடையச் செய்வதன் மூலம், ஆக்சிஜன் உள்ளெடுப்பை இது மேம்படுத்துகிறது. மூளைக்குப் புதிய ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தகவல்களை விரைவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

கருடாசனம்: கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பின்னுவதன் மூலம், இந்த ஆசனம் மூளையின் இடது, வலது அரைக்கோளங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தூண்டுகிறது. மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்களை நீக்கி, அறிவாற்றலைக் கூர்மையாக்குகிறது.

மூளைக்குப் புத்துணர்ச்சி: புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலின் நிலையை மாற்றுவதன் மூலம், இந்த ஆசனங்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, நீண்ட நேரம் படிப்பதால் ஏற்படும் மூளைச் சோர்வை நீக்குகின்றன.

அதோ முக ஸ்வானாசனம்: இதயத்திற்குக் கீழே தலையைக் கொண்டுவரும் இந்த நிலை, ஆக்சிஜன் நிறைந்த புதிய ரத்தத்தை நேரடியாக மூளைக்குச் செலுத்துகிறது. இது கழுத்து எலும்புகளின் அழுத்தத்தைக் குறைத்து, படிப்பதால் ஏற்படும் மனச் சோர்வை நீக்கும்.

சேது பந்தாசனம்: இந்த மிதமான பின்வளைவு ஆசனம், குனிந்து அமர்வதால் ஏற்படும் தோள்பட்டைச் சோர்வை நீக்கி, உடலின் மேல் பகுதியை விரிவடைய வைக்கிறது.

சிரசாசனம்: ஆசனங்களின் ராஜா என்று அழைக்கப்படும் இந்த மேம்பட்ட தலைகீழ் ஆசனம், மூளையின் உயர் செயலாக்க மையங்களுக்கு அதிகப் படியான ரத்த ஓட்டத்தை வழங்குகிறது. இது நினைவாற்றல், பகுப்பாய்வுத் திறன், மூளைச் செயல் பாட்டை மேம்படுத்துகிறது.

அமைதி நிலை

சவாசனம்: இது இல்லாமல் எந்த யோகா பயிற்சியும் முழுமை பெறாது. இது உங்கள் மூளையைத் தீவிர உழைப்பிலிருந்து ஆழ்ந்த மீட்புநிலைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கிறது. நீங்கள் யோகா பயிற்சியின் மூலம் பெற்ற மனத்தெளிவையும் படித்த தகவல்களையும் மூளை ஒருங்கிணைத்துச் சேமிக்க, இந்த ஆசனம் அமைதியான இடத்தை வழங்குகிறது.

த்ராடகம்: பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் பயிற்சி இது. ஏதேனும் ஓர் அசையாத பொருளை உற்று நோக்குவதை உள்ளடக்கியது. இது கவனத்தை அதிகரித்து, கண்களைத் தூய்மைப் படுத்தி, கண் தசைகளை வலுப்படுத்துகிறது. மாணவர் களின் தன்னம்பிக்கை, பொறுமை, மன உறுதியை அதிகரிப்பதோடு தேர்வு நேரத் தலைவலி, பதற்றம், தூக்கமின்மை போன்ற கோளாறுகளையும் குணப்படுத்துகிறது.

முத்திரைகள்

கை முத்திரைகள் ஆற்றலைச் சீராக்கவும் மாணவர் களின் பதற்றத்தைக் குறைத்துக் கவனத்தை அதிகரிக்கவும் உதவும் சிறந்த கருவிகள். இவை மாணவர்கள் தேர்வு எழுதும்போது அல்லது படிக்கும்போது எங்கும் எளிதாகச் செய்யக்கூடியவை:

ஞான முத்திரை: நினைவாற் றலையும் ஒருமுகப்படுத்தும் திறனையும் மேம்படுத்து வதற்கான மிக முக்கியமான முத்திரை இது. பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

ஹாகினி முத்திரை: அனைத்து விரல் நுனிகளையும் ஒன்றோடு மற்றொன்று தொடுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது மூளையின் செயல்திறனையும் சிந்தனைத் தெளிவையும் அதிகரிக்க உதவுகிறது.

பிராணமுத்திரை: நீண்ட நேரம் படித்து உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ சோர்வடையும் போது, உடலில் புதிய ஆற்றலைத் தூண்ட இந்த முத்திரை உதவுகிறது.

சாம்பவி முத்திரை: இது கண்களைப் புருவமத்தியில் நிலைநிறுத்திச் செய்யப்படும் தியானப் பயிற்சி. இதனை பிரமரி சுவாசப் பயிற்சியுடன் சேர்த்துச் செய்யும்போது, மாணவர் களின் கவனத்திறன் உயர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கல்வியின் முதன்மை நோக்கம் மாணவர்களைத் தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்துவது அல்ல, மாறாக வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதே. மாணவர்களுக்குச் சுய விழிப்புணர்வையும் மன உறுதியையும் யோகா கற்றுத் தருகிறது.

மனம் எப்போது அலைபாய்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதை மீண்டும் படிப்பை நோக்கித் திருப்புவதற்கான உத்திகளை யோகா வழங்குகிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் உடலை நிலைநிறுத்தவும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், தங்களின் கல்விப் பயணத்தில் மிகச் சிறந்த பயனைப் பெறுகிறார்கள்.

- செ.செல்வலட்சுமி

யோகா வழிகாட்டியிடம் பயிற்சி பெற்ற பின் இவற்றைச் செய்ய வேண்டும். கட்டுரையாளர், இணைப் பேராசிரியர், யோகா துறை, தமிழ்நாடு உடல்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்.

மாணவர்களின் கவனத்திறனை வளர்க்கும் யோகா!
அந்த ஒரு ‘பதில்’... சுஷ்மிதா சென் ‘பிரபஞ்ச அழகி’ ஆன கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in