

சென்னை: “சட்டப்பேரவையில் கேள்வி கேட்பதால் கூட இந்தச் சோதனை நடத்தியிருக்கலாம். அரசியல் ரீதியாக மிரட்டி வைக்கலாம் என்ற முறையில் இதுபோல சோதனை நடத்தியிருக்கலாம். இது உறுதியாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இந்தச் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை” என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “இன்று காலையில் 8 மணிக்கு எனது வீட்டில் சோதனை நடத்த வந்தார்கள். டெண்டர்களில் தவறுகள் நடந்துள்ளது, அது தொடர்பாக எஃப்ஐஆர் போட்டுள்ளோம், அதற்காக சோதனை மேற்கொள்கிறோம் என்று கூறினர். சென்னை, திருச்சியில் உள்ள எனது வீடுகள், என் தம்பி மற்றும் என் உதவியாளரின் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. என் அலுவலகத்தில் இருந்து ஒரு ஃபைலை எடுத்துள்ளனர். என் தம்பி வரவு செலவு எழுதி வைத்திருந்த ஒரு துண்டுச்சீட்டை எடுத்துச் சென்றனர். எந்தப் பொருட்களை எடுத்தோம் என என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர். காலை 8 மணி முதல் 3 மணி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அவர்கள் சொல்வது போல டெண்டர் விஷயமாக நான் யாரிடமும் பேசியதில்லை, எதுவும் செய்ததில்லை. இது தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வழக்கு பதிந்துள்ளது. அது நீதிமன்றத்தில் உள்ளதால், புதிதாக வழக்கு போட்டுள்ளார்கள். அது தொடர்பாக இன்று சோதனை நடத்தியுள்ளனர்.
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இதனை நீதிமன்றம் சென்று நான் நிரபராதி என நிரூபிப்பேன். சட்டப்பேரவையில் கேள்வி கேட்பதால் கூட இந்தச் சோதனை நடத்தியிருக்கலாம்.
ஆளும் கட்சியாக இருப்பதால் அப்படிச் செய்கிறார்கள். அரசியல் ரீதியாக மிரட்டி வைக்கலாம் என்ற முறையில் இதுபோல சோதனை நடத்தியிருக்கலாம். இது உறுதியாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான்” என்றார்.
முன்னதாக, திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம், திருச்சியில் பல்வேறு இடங்கள் மற்றும் கோவை என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.