‘மரியான் என்றும் 13’ - மகளை இழந்த தாயின் வலி பேசும் மொழியாக்க புத்தகம்!

‘மரியான் என்றும் 13’ - மகளை இழந்த தாயின் வலி பேசும் மொழியாக்க புத்தகம்!
Updated on
1 min read

சென்னை: மகளை இழந்த தாயின் வலி பேசும் ‘மரியான் என்றும் 13’ என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. இதை பிரெஞ்சு மொழியில் நோரா ப்ரெய்ஸி எழுதி இருந்தார். அதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீ அஸ்வத்தாமன்.

இந்தப் புத்தகத்தை 'நம் பதிப்பகம்' வெளியிட்டுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதை என்எல்சி கல்வித் துறை தலைவர் அரவிந்தபாபு வெளியிட்டார்.

சர்வதேச நாடுகள் சில சிறுவர்களின் சமூக வலைதள பயன்பாட்டுக்கு கடிவாளம் போடும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. இதற்கான தொடக்கப் புள்ளியாக ஆஸ்திரேலிய தேசம் உள்ளது. அங்கு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது.

குழந்தைகள் மத்தியில் தற்கொலை மரணங்கள், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் போக்குகள் உள்ளிட்ட உளவியல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்த சூழலில் இந்தச் சட்டம் அவசியமானது என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. இப்படி சர்வதேச அளவில் குழந்தைகளின் உளவியல் குறித்து பேசுகிறது ‘மரியான் என்றும் 13’ புத்தகம்.

புத்தகம் குறித்து நூலாசிரியர் நோரா ப்ரெய்ஸி:

“மரியான் என் அன்பு மகளே, பிப்ரவரி 13, 2013, பதிமூன்று வயதில் நீ உன் அறையில், உன் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்தாய். உனது மெத்தையின் அருகே தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த உன் அலைபேசி, உன் பள்ளியில் உன்னை துன்புறுத்தியவர்களையும், பகிடிவதை செய்தவர்களையும் ஞாபகப்படுத்தின.

இந்தப் புத்தகத்தை உனக்கும், நீ எங்களுடன் பகிர்ந்திடாத எதிர்காலத்திற்கும் சமர்ப்பிக்கிறேன்.

உனது இறப்பு பலரது வாழ்க்கைக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று இந்தப் புத்தகத்தை எழுதுகிறேன். பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், உன்னைப் போன்று பலரைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கும் கொடூரர்களின் கவனத்துக்கும், பள்ளிகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய அவசியத்தை துறைசார் அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தும் ஒரு முயற்சி.

இந்தப் படைப்பு மாணவர்களின் மனநலன் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்கான கவன ஈர்ப்பு.

இனியொரு குழந்தை இவ்வுலகின் தொடர்பை துண்டிக்கக் கூடாது என்பதற்கான முயற்சியும் கூட’ என முகவுரை கொடுத்துள்ளார் நூலாசிரியர் நோரா ப்ரெய்ஸி.

கடந்த 2015-ல் இந்த புத்தகம் பிரெஞ்சு மொழியில் வெளியானது. அதை இப்போது தமிழில் மொழி பெயர்த்துள்ளார் ஸ்ரீ அஸ்வத்தாமன்.

‘மரியான் என்றும் 13’ - மகளை இழந்த தாயின் வலி பேசும் மொழியாக்க புத்தகம்!
வெனிசுலா: இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in