

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள திருச்சானூரைச் சேர்ந்தவர் அஜித். ஆட்டோ ஓட்டுநரான இவர், தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகர். இவர் திருச்சானூர் - திருப்பதி இடையே ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார்.
திருச்சானூரில் இருந்து திருப்பதி பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்துக்கு இவரது ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் வெறும் ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார். மற்ற ஆட்டோக்களில் ஒவ்வொருவரிடம் ரூ.30 அல்லது ரூ.40 கூட வசூலிக்கப்படுகிறது.
பேருந்துகளில் தலா ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவர் ஒருவர்தான் பெண்களிடம் தலா ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூல் செய்கிறார். இவரை பக்தர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
அஜித் கூறும்போது, “நான் விஜய் சாரின் தீவிர ரசிகன். அவர் முதல்வரானதில் இருந்து என்னால் ஆன உதவியை மக்களுக்கு செய்ய திருப்பதி - திருச்சானூர் இடையிலான பயணத்துக்கு பெண்களிடம் ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறேன்'' என்றார். உங்கள் பெயர் அஜித் ஆனால் விஜய் ரசிகரா? என பலர் கேட்கின்றனர் என சொல்லி சிரிக்கிறார் அஜித்.