Published : 02 May 2023 04:32 PM
Last Updated : 02 May 2023 04:32 PM

90ஸ் ரீவைண்டு - நிலாச்சோறு நினைவுகள்

மின்விளக்குகளின் ஒளி கண்களைக் கூசாத அளவிற்கு, பின் மாலை இருளை விலக்கிக்கொண்டிருந்த 90களின் காலம்! மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருக்கும் நிலவு, பிரகாசமாக ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த ஒளி இரவு உணவைச் சாப்பிடுவதற்குப் போதுமானதாக இருக்கும்.

பெரும்பாலானோருக்கு இரவு உணவு நிலவின் வெளிச்சத்தாலும் ஆதரவாலும் அமைந்த காலம் அது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து இரவு உணவில் நிலாவும் முக்கிய உறுப்பினராக இடம் பிடித்திருக்கும். பால் நிலாவை அந்தக் காலத்தின் 'சிறப்பு விருந்தாளி' என்றும் சொல்லலாம்.

இரவுக் கவிதை

கிராமத்தில் இருப்பவர்கள் வீட்டின் முன் இருக்கும் களத்திலும், நகரத்தில் இருப்பவர்கள் வீட்டு மாடியிலும் அமர்ந்து நிலவின் ஒளியில் இரவு உணவைச் சாப்பிட்டது அக்காலத்தின் அழகான இரவுக் கவிதை. அக்கவிதைக்கு 'நிலாச்சோறு' என்று பெயர். நல் உணவால் கிடைக்கும் உடல் நலம் மட்டுமின்றி, குடும்பம் சூழ ஒற்றுமையாகச் சாப்பிடும் போது உள நலமும் நிலாச்சோறின் உதவியால் மேம்படும்.

பின் மாலைப் பொழுதில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இரவு உணவைச் சாப்பிட, நிலவின் மடியை நாடுவார்கள். தரையில் ஒரு பாய் அல்லது பெரிய ஜமுக்காளம் விரித்து, அதன் மீது சம்மணமிட்டு அனைவரும் வட்டமாக அமர்வார்கள். டைனிங்க் டேபில்களோ, குஷன் சோஃபாக்களோ பெரும்பாலான வீடுகளில் இல்லாத காலம் அது. சம்மணமிட்டு உணவு சாப்பிடுவதே அப்போதைய இயல்பான வழக்கம்.

அலைப்பேசி இல்லாத காலம்

அலைப்பேசி இல்லாத காலம் அது என்பதால், இரைச்சல் இல்லா இரவு உணவு சாத்தியமாக இருந்தது அப்போது! காலம் தவறிச் சாப்பிடும் இப்போதைய தவறான உணவியல் முறைக்கு வாய்ப்பில்லாமல் தடுத்தது அன்றைய நிலாச்சோறு பழக்கம். தடபுடலென நடக்கும் இப்போதைய இரவு உணவு விருந்து போல அல்லாமல், இரவுக்கு மேல் எளிதில் செரிமானமாகும் உணவுகளே பெரும்பாலும் நிலாச்சோறில் இடம்பெறும்.

உணவு அறிவியல்

'என்ன சாப்பிடுகிறோம், எதற்காகச் சாப்பிடுகிறோம்…' எனும் உணவு அறிவியலை நிலாச்சோறு கற்றுக்கொடுத்தது. அதாவது வீட்டில் இருக்கும் முதியவர்கள், 'இது இப்படியான உணவு, இதில் இவ்விதமான பயன்கள் இருக்கின்றன' என உணவின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து உணவைப் பரிமாறுவார்கள். ஆவியில் வெந்த இட்லியை எடுத்துக்கொண்டால், உளுந்தின் மருத்துவ குணம் என்ன, வெந்தயத்தின் நன்மை என்ன, தேவையான அளவுக்கு மட்டும் சாப்பிடுவது எவ்வளவு முக்கியம்' என உணவுக் குறிப்புகளை மனதில் பதிய வைத்துக்கொண்டே இருப்பார்கள்.

உணர்வுகளைப் பகிரும் மேடை

நிலவின் ஒளியில் இரவு உணவை முடித்த பிறகு, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் மேடையையும் நிலாச்சோறு அமைத்துக் கொடுக்கும்; குடும்ப உறுப்பினர்கள் மனம் விட்டுப் பேசும் சூழலாகவும் அமையும். குடும்ப கட்டமைப்பின் அழகியலையும், வீட்டில் இருக்கும் மூத்தோர்களின் அனுபவத்தையும் இளையவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும். இப்போதைய கேண்டில் லைட் டின்னர்களுக்கும், பெரிய பெரிய உணவகங்களில் மங்கிய வெளிச்சத்தில் சாப்பிடும் கலாச்சாரத்திற்கும் முன்னோடி நிலாச்சோறு! வித்தியாசம் என்னவென்றால் நிலாச்சோறுக்கான ஏற்பாடுகள் இலவசம்.

அம்மா காட்டிய நிலா

நிலாவைக் காட்டி தாய் தன்னுடைய குழந்தைக்குச் சோறூட்டும் வழக்கம், இயற்கையோடு ஒன்றிணையும் ஒத்திகை. நிலவையும், நிலவுக்குத் துணையாக மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களையும் சுட்டிக்காட்டி இரவு உணவை ஊட்டுவதும் நிலாச்சோறில் ஒரு வகை! இப்போது நிலவு புறந்தள்ளப்பட்டு அலைப்பேசிகளின் மின்னும் ஒளியுடன் குழந்தைகளுக்குச் சோறூட்டும் பழக்கம் வெகுவாக அதிகரித்துவிட்டது.

குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் நான்கு சுவர்களுக்குள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டு இரவு உணவை எடுத்துக்கொள்வதைப் பார்க்கலாம். இடது கையில் அலைப்பேசியைச் சொடுக்கிக்கொண்டே, என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் தன்னிலை மறந்து சாப்பிடும் சூழலைச் சர்வ சாதாரணமாக அனைத்துக் குடும்பங்களிலும் இப்போது பார்க்க முடிகிறது.

மீண்டும் நிலாச்சோறு

பௌர்ணமி வெளிச்சத்தில் அருகில் இருக்கும் மலைப் பகுதிகளுக்கோ, வெட்டவெளிகளுக்கோ உறவுகள் சூழக் கூட்டாகச் சென்று இரவு உணவை மகிழ்ச்சி பொங்கச் சாப்பிட்ட சூழல் நமது உணவுக் கலாச்சாரத்தில் ஊறி இருந்தது. அதிவேக உலகம், இயற்கையை விட்டு விலகிய வாழ்க்கை முறை, அலைப்பேசி ஆதிக்கம் போன்ற பல காரணிகளால் நிலாச்சோறும் நிலவை இரவில் ரசிக்கும் மக்களின் ரசனையும் காணாமலே போய்விட்டது.

வார இறுதி நாட்களில் மட்டுமாவது நேரத்தை அமைத்துக்கொண்டு, நிலாச்சோறு சாப்பிடக் குடும்பம் சகிதமாக மாடிக்கோ, முற்றத்துக்கோ செல்லத் தயாராகுங்கள்! அது வயிற்றை மட்டுமல்ல; மனத்தையும் நிறைக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x