Published : 11 Mar 2023 06:37 PM
Last Updated : 11 Mar 2023 06:37 PM

டெல்லி | பானி பூரி விற்பனை செய்து வரும் பி.டெக் பட்டதாரி பெண்: நெட்டிசன்கள் பாராட்டு மழை

பானி பூரி விற்பனை செய்யும் டாப்சி உபாத்யா

புதுடெல்லி: பானி பூரியை விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு பிரியர்களுக்கு அதனை சுகாதாரமான முறையில் வழங்க வேண்டுமென்ற நோக்கில் அந்தத் தொழிலில் களம் இறங்கியுள்ளார் 21 வயதான பி.டெக் பட்டதாரி டாப்சி உபாத்யா. பானி பூரி விற்பனை மேற்கொள்ளும் இந்த இளம் பட்டதாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

வாகனங்கள் பரபரக்கும் டெல்லி நகர சாலைகளின் ஓரத்தில் இயங்கி வரும் லட்சக்கணக்கான பானி பூரி கடைகளில் ஒன்றுதான் டாப்சி நடத்தி வரும் பானி பூரி கடை. அவரது வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தனது முயற்சி குறித்து அவர் விளக்குகிறார். அந்த வீடியோவின் துவக்கமே புல்லட் வண்டியை அவர் கெத்தாக ஓட்டி வரும் காட்சியுடன் தொடங்குகிறது. அதன் பின்புறம் பானி பூரி கடைக்கான சிறிய அளவிலான தள்ளுவண்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

“சுகாதாரமான முறையில் பானி பூரி வழங்க வேண்டுமென்ற நோக்கில் இதை தொடங்கி உள்ளேன். எனது முயற்சியை பார்த்து பலரும் பலவிதமாக பேசினர். ‘பெண் பிள்ளையான நீ வீட்டில் போய் பாதுகாப்பாக இருக்காலம், படித்த உனக்கு ஏன் இந்த தொழில்’ என்றெல்லாம் சொன்னார்கள். அதை நான் கண்டுகொள்ளவில்லை. இந்த சமூகம் என்ன சொல்கிறது என கவனிக்கவில்லை. என் தொழிலை தொடர்ந்தேன். இது நானாக தேர்வு செய்த தொழில்” என அந்த வீடியோவில் அவர் தன் அனுபவத்தை பகிர்கிறார்.

டெல்லி, திலக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர் பானி பூரி விற்பனை செய்து வருகிறார். சுமார் 59 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பலரும் டாப்சியின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்களின் கமெண்ட் ‘சூப்பர், சிறப்பான முயற்சி, வாழ்த்துகள் சகோதரி’ என்றுதான் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x