Last Updated : 05 Feb, 2023 01:34 AM

 

Published : 05 Feb 2023 01:34 AM
Last Updated : 05 Feb 2023 01:34 AM

வடகிழக்கு சீனாவில் இருந்து பறவைகள் சேலம் மாவட்டத்துக்கு வருகை

சேலம்: வடகிழக்கு சீனாவில் இருந்து புதிய வெளிநாட்டு பறவைகள் சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வருகை தந்ததை பறவையியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரியில் பறவையியல் கழகத்தை சேர்ந்த ஆர்வலர்கள் முகாமிட்டு, பறவை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை சூழலுடன் ஒன்றிய நீர் நிலை ஆதாரமாக விளங்கி வரும் மணிவிழுந்தான் ஏரி, புல்லினங்களின் சொர்க்கபூமியாக காட்சியளித்து வருகிறது. சமீபத்தில் மணிவிழுந்தான் ஏரியில் அக்சென் ஃபவுண்டேஷன், மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம் மற்றும் சேலம் பறவையியல் கழக இயக்குனர் கணேஷ்வர் குழுவை சேர்ந்த ஏஞ்சலின் மனோ, காசி விஸ்வநாதன், ராகுல் சிங் உள்ளிட்டோர் பறவைகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணியின் மூலம் 142 வகையான பறவை இனங்கள் வந்துள்ளதை பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வடகிழக்கு சீனா வரையிலான சதுப்பு நிலக்காடுகளில் காணப்படும், புதிய வெளிநாட்டு பறவைகள், மணிவிழுந்தான் ஏரிக்கு வந்து கண்டுபிடித்துள்ளனர். வெளிநாட்டு பறவைகளின் வருகைக்கு ஏற்ற வகையிலான தட்பவெப்பம் மற்றம் இயற்கைசூழலுக்கு உகந்த இடமாக மணிவிழுந்தான் ஏரி மாறியிருப்பது பறவையியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த புதிய பறவை இனங்களான சதுப்பு மண்கொத்தி மற்றும் கொசு உள்ளான் பறவையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியதாவது: "கொசு உள்ளான் பறவை மண்கொத்தியை விட சிறியதாக இருக்கும். வடதுருவப் பகுதிகளில் உள்ள சைபீரிய சமவெளிகளில் இனப்பெருக்கம் செய்யும். சதுப்பு மண்கொத்தி கிழக்கு ஐரோப்பா முதல் வடகிழக்கு சீனா வரையிலான பகுதிகளில் உள்ள ஊசியிலைக்காடுகளை ஒட்டியுள்ள சதுப்பு நிலங்களில் வசிக்கும். அங்கே குளிர் காலம் துவங்கும் போது அந்தப் பறவைகள் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளை நோக்கி வலசை வருவது வழக்கம். இப்பறவைகளானது, மீண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்லும்.

அப்படி செல்லும் வழியில் வெகு சில இடங்களில் மட்டும் தரையிறங்கி சில நாட்கள் புழுக்கள், பூச்சிகளை சாப்பிட்டு, உடலில் கொழுப்புச்சத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் பறக்கத் துவங்கும். இது போன்ற இடங்களுக்கு ஆங்கிலத்தில் "ஸ்டாப் ஓவர் சைட்" என்று கூறுவார்கள். அப்படியான ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மணிவிழுந்தான் ஏரி மாறியிருப்பதால், மேலும், வெளிநாடுகளில் இருந்து புதிய புதிய பறவை இனங்கள் வருவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

வெளிநாட்டு பறவை இனங்கள் வாழ்விடத்துக்கு ஏற்ற வகையிலான தகவமைப்பை கொண்டுள்ள மணிவிழுந்தான் ஏரியில் தண்ணீர் குறையும் போது வெளிப்படும் தாழ்வான சேற்றுப் பகுதிகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு ஏரியின் சூழலுக்கு கரையோரப் பகுதிகள் அவசியமானது. இது போன்ற இடங்களை விரும்பி வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வரும். இந்த இரண்டு பறவைகளின் வருகையும் மணிவிழுந்தான் ஏரியின் சூழலியல் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதுடன், பல்லுயிர் பெருக்கத்துக்கான கேந்திரமாக விளங்குவது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x