Published : 17 Jan 2023 04:03 AM
Last Updated : 17 Jan 2023 04:03 AM

பொங்கல் | சூளகிரியில் களைகட்டிய எருதுவிடும் விழா: பரிசை பறிக்க இளைஞர்களிடையே போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூளகிரி அருகே ஆருப்பள்ளி கிராமத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில், சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களைப் பறிக்க முயன்ற காளையர்கள் .

கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூளகிரி அருகே ஆருப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில், காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களைக் பறிக்க இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவியது.

சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருதுவிடும் திருவிழா நடந்தது. விழாவில், பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும், கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விழாவில், காளைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகளில் பரிசுப் பொருட்கள் அடங்கிய தட்டிகளைக் காளை உரிமையாளர்கள் கட்டியிருந்தனர். விழா தொடக்கத்தில் கோ-பூஜை நடந்தது. பின்னர், விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.

சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளில் கொம்பில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் அடங்கிய தட்டியைப் பறிக்க இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவியது. சில காளைகள் இளைஞர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றன. இதில், வேடிக்கை பார்க்க நின்ற கூட்டத்தில் காளைகள் புகுந்ததால், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சூளகிரி பகுதியைச் சேர்ந்த அன்பு கூறியதாவது: எருது விடும் விழாவில் காளைகளின் கொம்புகளில் கட்டப்படும் தட்டிகளில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மற்றும் தங்க மோதிரம் உள்ளிட்ட பொருட்களைக் காளையின் உரிமை யாளர்கள் கட்டி விடுவார்கள்.

இதைப் பறிக்க இளைஞர்கள், தனியாகவும், குழுவாகவும் களம் இறங்குவார்கள். தட்டியைப் பறித்த இளைஞர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்படும். இளைஞர்கள் கையில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக் குழு சார்பில் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில்....: கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலை மற்றும் மேல் தெரு, அவதானப்பட்டி, வேப்பனப்பள்ளி அருகே வி.மாதேப்பள்ளி ஆகிய இடங்களில் எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவைக் காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x