Published : 05 Jan 2023 04:03 AM
Last Updated : 05 Jan 2023 04:03 AM

கோவை விழா தொடங்கியது - விளையாட்டுப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் அசத்தல்

கோவை விழாவையொட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த பாரா விளையாட்டுப் போட்டியில் கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள். படம் : ஜெ.மனோகரன்

கோவை: கோவை விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஆர்வத்துடன் பங்கேற்று மாணவ, மாணவிகள் விளையாடினர் .

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ‘யங் இந்தியன்ஸ்’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் 15-வது ‘கோவை விழா’ நிகழ்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டி மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் 100-க்கும் மற்பட்ட மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மொத்தம் 15 போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரியோர்களுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகளில், பாரா வாலிபால், பாரா கூடைப்பந்து, வாள்வீச்சு, பவர் லிஃப்டிங் மற்றும் வில்வித்தை போன்ற 5 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவை விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் பல்வேறு வழிபாட்டுத் தலங்களை சுற்றிப் பார்த்து, அனைத்து மதங்களை புரிந்து கொள்ளவும், மதங்களின் மீதான அவர்களின் மதிப்பை வளர்க்கவும் ஒருமை பயணம் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 26 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கோவை கோனியம்மன் கோயில், புனித மிக்கேல் தேவாலயம், ஒப்பணக்கார வீதி அத்தார் ஜமாத் மசூதி, ஆர்.எஸ்.புரம் ஜெயின் கோயில், குருத்வாரா சிங் சபா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு இடத்திலும், அந்தந்த மத வழக்கப்படி மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

ஆன்மிகத் தலைவர்கள், தாங்கள் பின்பற்றும் கொள்கைகளையும், தங்களின் வழிபாட்டு முறைகளையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பின்னர், வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் வகையில் போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மையத்தில் சர்வமத பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x