Last Updated : 28 Dec, 2022 03:25 PM

 

Published : 28 Dec 2022 03:25 PM
Last Updated : 28 Dec 2022 03:25 PM

பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு வரவேற்பு: திருக்குறளைத் தேடி வாங்கிய வாசகர்கள்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றுவரும் தமிழ்ப் புத்தக திருவிழாவின் திரண்ட வாசகர்கள்

பெங்களூரு: பெங்களூருவில் நீண்ட காலத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு கர்நாடகத் தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமான வாசகர்கள் திருக்குறள் நூலை தேடி வாங்கிச் சென்றனர்.

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், சாம்ராஜ்நகர் உட்பட மாநிலம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கு 1990-களுக்குப் பிறகு தமிழ் பள்ளிக்கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டதால் தமிழர்கள், தமிழ் வ‌ழிக் கல்வி கிடைக்கப்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் புத்தக கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், கர்நாடக தமிழர்களில் இளம் தலைமுறையினருக்கு தமிழை கற்பிக்கும் முயற்சியில் பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழாசிரியர் சங்கம், பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழ் புத்தக திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா தொடங்கியது. வரும் ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 25 நூல் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா முழுவதிலும் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட‌ வாசகர்கள் ஆர்வத்துடன் வந்து, தமிழ் நூல்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். திருக்குறள், திருவாசகம், கம்பராமாயணம் உள்ளிட்ட பழமையான இலக்கிய நூல்களை பெரும்பாலானோர் விரும்பி வாங்கி சென்றனர். ஆங்கிலம் வழியாக தமிழ் கற்க உதவும் அடிப்படை தமிழ் நூல்களையும் நிறைய‌ வாசகர்கள் வாங்கியதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழக்கொழிந்த தாயக் கட்டை, தட்டாங்கல், சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட தமிழ் மரபு விளையாட்டுகள் கற்று கொடுக்கப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரபு விளையாட்டுகளை விளையாடினர். இதனிடையே புத்தக அரங்கை பார்வையிட்ட, அறிஞர் குணாவிடம் ஏராளமான வாசகர்கள் கையெழுத்து பெற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டன‌ர். அதேபோல், சிந்தனைக்களம் நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி சிறப்புரை ஆற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x