Published : 13 Dec 2022 04:27 AM
Last Updated : 13 Dec 2022 04:27 AM

தன் பெயரிலும், தனது பாட்டி பெயரிலும் நல்லூர்களை உருவாக்கிய முதலாம் குலோத்துங்க சோழன்: ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தகவல்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான சூலக்கல் கல்வெட்டின் மூலம் மன்னன் முதலாம் குலோத்துங்க சோழன் தன் பெயரிலும், பாட்டியின் பெயரிலும் ஊர்கள் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருவாடானை அருகில் ஓரியூர் கீழக்குடியிருப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்களில்தினமும் வழிபாடு நடைபெறுவதற்காக விளை நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி கோயில்களுக்கு அவற்றைத்தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அவ்வாறு வழங்கிய நிலத்தின் நான்கு மூலைகளிலும் எல்லைக்கல் நட்டு வைப்பார்கள். சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்படும்.

ஓரியூர்கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி உ என கல்வெட்டு முடிகிறது. உடையார் திருப்புன வாயிலுடைய நாயனார் தேவதானம் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி காராண்கிழமை நின்ற நிலையன்றாதானான் உலகுய்யவந்த நல்லூர் என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் காராண்கிழமை கல்வெட்டு ஆகும். கல்வெட்டில், தற்போது ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும் அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஓரியூர் கீழக்குடியிருப்பு திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்புனவாசல் ஓரியூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஏற்கெனவே உள்ள ஓர் ஊரில் பயிரிடும் நிலங்களை அதிகமாக உருவாக்கி அவ்வூரை மானியமாக கோயில்களுக்கு மன்னர்கள் அளித்து, பழைய பெயருடன் நல்லூர் என்னும் பின்னொட்டுடன் கூடிய புதிய பெயரும் அவ்வூருக்குச் சூட்டப்படும். இக்கல்வெட்டில் வானவன் மாதேவி நல்லூர், உலகுய்யவந்த நல்லூர் ஆகிய இரு நல்லூர்கள் உள்ளன. இதில் உலகுய்யவந்தான் என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய சிறப்புப் பெயர். வானவன் மாதேவி என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவியும், முதலாம் குலோத்துங்க சோழனின் தாய் வழி பாட்டியும் ஆவார்.

இதில் வானவன் மாதேவி நல்லூர் தற்போதைய ஓரியூர் ஆகும். ஆனால்உலகுய்ய வந்த நல்லூர் எங்குள்ளது என அறிய இயலவில்லை. தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் முதலாம் குலோத்துங்கச் சோழன் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டின் எழுத்தமைப்பைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x