Last Updated : 09 Nov, 2022 08:07 PM

 

Published : 09 Nov 2022 08:07 PM
Last Updated : 09 Nov 2022 08:07 PM

மழைக்கால நோய்களும் தற்காற்பு வழிகளும் - சித்த மருத்துவர் ஆலோசனை

பிரதிநிதித்துவப் படம்

தமிழகத்தில் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் மக்களை மகிழ்வித்தாலும், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல், ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், தும்மல் போன்றவைகளால் அவதிப்பட்டு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருவது வேதனையளிக்கிறது.

இதனால், மழைக்காலம் வந்து விட்டாலே பலர் பயப்படுவதும் உண்டு. மழைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள், எத்தகைய நோய்கள் வந்தாலும் அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் எண்ணற்ற வழிமுறைகள் உண்டு என வேலூர் புற்று மகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தின் இயக்குநரும், இம்ப்காப்ஸ் இயக்குநருமான மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மழைக் காலங்களில் ஏற்படும் குளிர்ச்சியான சூழலை தாங்கிக் கொள்ளும் விதமாக உடலின் உட்சூடு தோலுக்குள் ஊடுருவிச் சென்று ஒழுங்குபடுத்தும் காரணத்தால் உடலைக் காக்கும் ஆற்றலில் குறைவு ஏற்படுகிறது. அதனால் செரிமானக் கோளாறில் தொடங்கி பசி ஏற்படுவதிலும் மந்த நிலை ஏற்படும். இதை கருத்தில்கொண்டு மழைக்காலத்தில் எப்போதுமே சற்று சூடான உணவுகளை சாப்பிட்டால் அவை எளிதில் செரிமானமாகும். குறிப்பாக துவரை, உளுந்து மற்றும் பயறு வகைகள், பழைய அரிசி, கேழ்வரகு மற்றும் புதிதாக பறித்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது.

எளிதில் செரிமானமாகும் பஞ்சமுட்டி கஞ்சி, பால்கஞ்சி மற்றும் சுக்கு, திப்பிலி, திப்பிலி மூலம், தேன் போன்றவற்றை சாப்பிடுவதும் நல்லது. மழைக்காலங்களில் நாம் அருந்தும் தண்ணீரில் கவனம் தேவை. எனவே, தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிறகு பருகுவது நல்லது. நாம் குடிக்கும் நீரை காய்ச்சி ஆற வைத்து குடிப்பதுபோல குளிக்கும் நீர் வெது, வெதுப்பாக இருப்பது நல்லது. குளிப்பதற்கு முன் நொச்சி, நுணா, வேப்பிலை, யூகலிப்டஸ் போன்ற இலை களை தனியாகவோ, மொத்தமாகவோ நீருடன் சேர்த்து கொதிக்கவைத்து குளிப்பது நல்லது.

சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்

மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் காய்ந்த வேப்பிலை அல்லது காய்ந்த நொச்சியிலை அல்லது காய்ந்த ஆரஞ்சுத் தோலுடன் பச்சைக்கற்பூரம் சேர்த்து புகை மூட்டம் போட்டால் கொசு தொல்லை இருக்காது. பூண்டுத்தோல், தேங்காய் நார், மஞ்சள்தூள் போன்றவற்றை தீயில் எரித்து புகைமூட்டம் போட்டாலும் கொசுக்கள் விலகும். மழைக்காலங்களில் கப நோய்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. வெந்நீர் அல்லது வெது, வெதுப்பான நீரை பருகுலாம். தினசரி 10 துளசி இலை மென்று சாப்பிடுலாம், தூதுவளை இலைகளை துவையல் அரைத்துச் சாப்பிடுவது, திப்பிலி மற்றும் கண்ட திப்பிலியில் ரசம் வைத்து உணவில் சேர்த்துக்கொள்லாம்.

இதன் மூலம் கபநோய்கள் வருவதை தவிர்க்க முடியும். காலையில் இஞ்சி தேநீர், மாலையில் சுக்கு மல்லி காபி, கற்பூரவல்லி இலைகளில் பஜ்ஜி செய்து சாப்பிடுவது, கல்யாண முருங்கை இலைகளில் வடை, அடை செய்து சாப்பிடுவதும் கப நோய்களை தவிர்க்கும். இரவு நேரங்களில் வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி விலகும்.

இருமல் மற்றும் தொண்டை தொடர்பான நோய்களிலிருந்து விடுபட கிராம்பை தீயில் சுட்டு அதனுடன் ஒரு கல் உப்பை சேர்த்துச் சாப்பிடலாம். வால் மிளகுடன், அதிமதுரம் சேர்த்து பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல், தும்மல் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். இத்துடன் முருங்கைக்கீரை சூப், காய்கறி சூப் மற்றும் பார்லி கஞ்சி செய்து அருந்துவதும் மழைக்கால நோய்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x