Published : 17 Sep 2022 06:28 PM
Last Updated : 17 Sep 2022 06:28 PM

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி முதல் சிகிச்சை வரை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி வழிகாட்டுதல்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறி முதல் சிகிச்சை வரை பல்வேறு தகவல்களை விளக்குகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? - இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று எப்படி வேண்டும் என்றாலும் இந்த வைரஸ் காய்ச்சல் வரலாம். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சில நேரங்களில் தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். 80 சதவீத பேருக்கு இது லேசான காய்ச்சலாகத்தான் உள்ளது.

இந்த காய்ச்சல் பரவுவது எப்படி? - பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுகிறது. மழைக் காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவும். seasonal influenza என்பதுதான் இந்த காய்ச்சலின் பெயர். பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுகின்ற காரணத்தால் இந்தப் பெயர் வைத்து அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் இந்தக் காய்ச்சல் எளிதாக பரவும். இந்தக் காய்ச்சல் ஜூலை மாதம் தொடங்கி கோடை காலம் தொடங்குவது முன்பு வரை இருக்கும்.

இந்த வைரஸ் உருமாற்றம் அடையுமா? - இந்தக் காய்ச்சல் பாதிப்பு காலம் நாடுகளுக்கு நாடு வேறுபடும். இந்தியாவில் ஜூலை மாதம் தொடங்கும். அமெரிக்காவில் அக்டோபர் மாதம் தொடங்கும். மழைக் காலத்தில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு தொடங்கி வெயில் காலத்தில் குறைந்து விடும். இதன்பிறகு அடுத்த ஆண்டுகளில் இந்த வகையான காயச்சல் அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

காய்ச்சலின் அறிகுறி என்ன? - சளி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் ஆகிவைதான் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். பொதுமக்கள் சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரின் சோதனையில்தான் உங்களுக்கு என்ன மாதிரியான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

குழந்தைகளை மட்டும்தான் இது பாதிக்குமா? - இல்லை. இந்த வகையான காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும். அறிகுறிகள் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக சிலருக்கு லேசான அறிகுறியும், ஒரு சிலருக்கு தீவிரமான அறிகுறியும் இருக்கும்.

சிகிச்சை முறைகள் குறித்து விளக்க முடியுமா? - லேசான அறிகுறி உள்ளவர்கள் தனிமையில் இருந்தால் போதுமானது. விட்டமின், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் போதும். தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு தனி மருந்து உள்ளது. மருத்துவர்கள் சோதனை செய்து பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த மருந்துகள் அளிக்கப்படும்.

எத்தனை நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்? - லேசான அறிகுறி உள்ளபோது சிகிச்சை பெற தொடங்கி விட்டால் 5 நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும். தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு காய்ச்சலின் தீவிரத் தன்மை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. வயதுக்கு ஏற்றது போல் மருந்துகளின் அளவு மட்டும் மாறுபடும்.

தடுப்பூசி உள்ளதா? - இந்த நோய்க்கு ஃப்ளு தடுப்பூசி என்று தனியாக ஒரு தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசி தயாரிப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறும். வைரலில் ஏற்படும் உருமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசி தயாரிப்பு மாறும். ஒவ்வொரு வருடமும் வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும். எல்லாருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்படாது. குழந்தைகள், முதியவர்கள், அதிகம் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோருக்குதான் முன்னுரிமை அளித்து இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

எது மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்? - கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அதிகம் கூட்டம் இடங்களுக்கு குழந்தைகள் அழைத்து செல்லக் கூடாது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பக் கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x