Published : 05 Sep 2022 10:18 AM
Last Updated : 05 Sep 2022 10:18 AM

81 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் நிலையில் வீணடிக்கப்பட்டு குப்பைக்கு போகும் 250 கோடி டன் உணவு பொருட்கள்

உலக அளவில் 81.1 கோடிமக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் 250 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனிதகுலம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று உணவு வீணாதல். உணவு வீணடிக்கப்படுவது என்பது உணவை மட்டும்குறிப்பது அல்ல. அந்த உணவைஉற்பத்தி செய்ய செலவழிக்கப்பட்ட பணம், மனித உழைப்பு, பயிரிடப்பட்ட நிலம், நீர், போக்குவரத்து என அனைத்தையும் குறிக்கிறது.

உலகம் முழுவதும் வீணாகும் உணவு பொருட்களால் அதிகஅளவிலான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. இது புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

இந்நிலையில், உணவு பொருட்கள் வீணாதல் குறித்து உலகளாவிய ஆய்வு ஒன்றை கேப்ஜெமினி நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. உலக அளவில் 250 கோடி டன் உணவு பொருட்கள் ஆண்டுதோறும் வீணாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு வீணாகும் உணவில் வெறும் 50 சதவீதத்தைக் கொண்டே உலகத்தின் பசிக் கொடுமையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற வியக்கத்தக்க தகவலையும் தெரிவித்துள்ளது.

45 சதவீத குழந்தைகள்: உலகில் 81.1 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட 45 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தினமும் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதை மக்கள் உணர்கிறார்களா என்பது தொடர்பாகவும் அந்நிறுவனம் ஆய்வுநடத்தியுள்ளது. இதில், உணவை வீணாக்க கூடாது என கடந்த 2020-ம்ஆண்டு 33 சதவீதம் பேர் உணர்ந்துள்ளதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உணவு விநியோகத்தில் உள்ள சவால்கள், கரோனா பரவல் ஆகியவற்றின் காரணமாக உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுவே உணவு வீணாவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 72 சதவீத பேர் உணவு பொருட்களை வீணாக்க கூடாது என்பதை உணர்ந்துள்ளனர்.

மேலும், உணவு பொருள் வீணாவதை எப்படி குறைப்பது என்பதுபற்றியும் சமூக வலைதளங்கள் மூலம்மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் 80 சதவீதம் பேர் உணவு பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இணையத்தில் தேடுவதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல, உணவு பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு உற்பத்தி நிறுவனங்கள் வழங்குவது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதிதேதியை முறையாக அதில் தெரிவித்தால், உணவு பொருட்கள் வீணாவது கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு தேவை: மேலும், தொழில்நுட்பங்களின் உதவியுடன் உணவை பாதுகாத்து,அவை வீணாகாமல் தடுப்பது குறித்துநுகர்வோரிடம் உணவு உற்பத்தி நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதை கண்காணிக்கவும், புகார் அளிக்கவும் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தால் உணவு வீணடிக்கப்படுவதை கட்டாயம் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

உணவை வீணாக்காதீர்கள்!: ‘சாப்பிடக்கூடிய அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் எடுத்துக்கொண்ட அனைத்தையும் சாப்பிடுங்கள்’ என டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் ஒருசில ஓட்டல்களில், ரத்தன் டாடாவின் இந்த வாசகத்தை மையப்படுத்தி, தினமும் வாடிக்கையாளர்களால் வீணாக்கப்படும் உணவின் அளவையும், அந்த உணவை எத்தனை பேர் உண்ணலாம் என்பதையும் குறிப்பிட்டு ‘உணவை ஒருபோதும் வீணாக்காதீர்கள், தினமும் ஒருவர்உணவுக்காக உயிரிழக்கிறார்’ என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இதுபோல அனைத்து ஓட்டல்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும், வீடுகளில் வீணாகும் உணவை குப்பையில் போடாமல், அது கெட்டுப் போவதற்குள், இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் பசியை ஆற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x