

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் மூலம், நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் சிறைகளில் உள்ள 81 சிறைவாசிகள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
அனைவருக்கும் எளிதில் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொலைதூரக் கல்வி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பணிபுரிபவர்களும் தொடர்ந்து உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மேலும், சிறைவாசிகளும் கல்வி கற்று பட்டம் பெறும் வகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் 2022-23-ம் ஆண்டு முதல் இலவசமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் சார்பிலும் சிறைவாசிகள் இலவசமாக பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதுநிலைப் பிரிவில் எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. தமிழ் ஆகிய படிப்புகளும், இளநிலைப் பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. வரலாறு ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இவர்களுக்கு பாடப்புத்தகங்கள், தேர்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் வகுப்புகள் உள்ளிட்ட கல்வி சார்ந்த உதவிகளை சிறைப் பிரிவில் உள்ள பயிற்றுநர்கள் வழங்கி வருகின்றனர்.
நிகழாண்டில் திருச்சி சிறையில் எம்.ஏ. வரலாறு படிப்பில் 2 பேரும், பி.ஏ. வரலாறு படிப்பில் 13 பேரும், பி.ஏ. தமிழ் படிப்பில் 10 பேரும் என மொத்தம் 25 சிறைவாசிகள் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட படிப்புச் சாதனங்கள் அனைத்தும் சிறைப் பிரிவு பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி பெறும் சிறைவாசிகளுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டம் வழங்கப்படும். சிறையில் இருப்பதால் நேரடியாகப் பட்டம் பெற முடியாத நிலையில், அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இதேபோல, நிகழாண்டில் மதுரை சிறையில் 35 பேரும், கோவை சிறையில் 14 பேரும், கடலூர் சிறையில் 7 பேரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.
பிற சிறைகளிலும் உள்ள சிறைவாசிகள் உயர்கல்வி பயில்வதற்கான விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்விப் பணியக அறிவுறுத்தலின்படி, தொலைதூர மற்றும் இணைய வழிக் கல்வி மையத்தின் சேர்க்கை அக்.13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதுவரை சிறைவாசிகளும் இப்பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.