

நோய் காரணமாக ஒரு நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் காப்பீடு மருத்துவக் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. மருந்துகள், மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்ந்து பெறும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் மருத்துவக் காப்பீட்டின் கீழ் வருகின்றன. இதனால் மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளே மக்களுக்கு கூட்டு திட்டத்தின் மூலம் வழங்குகின்றன. தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மருத்துவக் காப்பீடு பொதுவாக நீண்ட கால பாலிசியாகும். பாலிசியின் அனைத்து விதிமுறைகளையும் சலுகைகளையும் மறக்கக் கூடாது. ஒருவர் சம்பாதிக்க தொடங்கும் வயதிலேயே மருத்துவக் காப்பீடு பெற வேண்டும். முன்பே எடுக்கப்பட்ட பாலிசியில் பலன்கள் அதிகமாக இருக்கும். எனவே மருத்துவப் பிரச்சினை ஏற்படும் முன்பு பாலிசி எடுத்துவிட்டால் அதற்கான பயனை அடைய முடியும். மருத்துவ அவசரம் என்பது எப்போதும் ஏற்படலாம் என்பதால் அதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய பாலிசிகள் பெரும்பாலும் அடிப்படை கவரேஜை வழங்குகின்றன. மருத்துவ பாலிசியை வாங்கிய 2-5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முக்கியமான நோய்களுக்கான சிகிச்சைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காப்பீடு வழங்குகின்றன.
எனவே ஒருவர் மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கும்போது ஒருவர் வசிக்கும் நகரத்தில் மருத்துவச் செலவு தொகை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாலிசி எடுக்க வேண்டும்.
காப்பீட்டுத் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பது முக்கியம். மிகப்பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் வைத்திருப்பது அனைத்திற்குமான தீர்வு அல்ல. வயது, செலவு, மருந்துகளின் விலை உயர்வு போன்றவை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் அல்லது இரட்டிப்பாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பாலிசி உள்ளதா என்பது மிக முக்கியம்.
மகப்பேறுக்கும் பாலிசி
இன்றைய சூழலில் மகப்பேறு மருத்துவ செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மகப்பேறு அறுவை சிகிச்சையும் மிக அதிக அளவில் நடக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில காப்பீடு நிறுவனங்கள் மகபேறுக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கின்றன.
வருமான வரி விலக்கு
மருத்துவக் காப்பீட்டு திட்டங்களுக்கு வருமான வரி பிரிவு 80D இன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், வயதின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்