வெர்ஜினியாவில் `துளிர்க்கும் வேர்கள்’ | மண் வாசனையை மறக்காத இந்திய விவசாயி மகளின் கதை இது! 

வெர்ஜினியாவில் `துளிர்க்கும் வேர்கள்’ | மண் வாசனையை மறக்காத இந்திய விவசாயி மகளின் கதை இது! 
Updated on
2 min read

அமெரிக்காவில் ஐடி வேலை... இது இந்திய மென்பொறியாளர்கள் பலரின் கனவு. அதுதான் தெலங்கானா மாநிலம் வைஷாலி கொனதமின் கனவாகவும் இருந்தது. விரும்பியவாறே அமெரிக்கா சென்றார் வைஷாலி. வெர்ஜினியா மாகாணத்தில் ஐடி வேலையில் அமர்ந்தார். ஆஷ்பர்னில் உள்ளது இவரது வசிப்பிடம். கணவரும் ஐடி தொழிலாளி. விரும்பிய ஐடி வேலை இருந்தாலும்கூட வைஷாலியின் ஆன்மாவை வருடி, அன்றாட அழுத்தங்களில் இருந்து விடுதலை தருவதென்னவோ விவசாயம் தானாம்.

கணினி எங்கே களிமண் எங்கே என நாம் யோசிக்கலாம். ஆனால், ஒரு விவசாயியின் மகளான வைஷாலி இதனை 'வேர்கள் எப்போதும் விடாது துரத்தும். அதுவே என் வாழ்விலும் நடந்துள்ளது' என்று பெருமிதத்துடன் சொல்கிறார். ஆரம்பத்தில் வைஷாலி வீட்டுக் கொல்லைப்புறத்தில் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளார். அதுவே ஒருநாள் அவருக்கு ஏன் நாம் விவசாயத்தை முழுவீச்சில் செய்யக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிறு வயதில் தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் தனது தந்தையுடன் வயல்வெளிகளில் உலா வந்ததெல்லாம் பசுமையாக, எண்ண அலைகளாக மனதை ஆக்கிரமிக்க அதற்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் வைஷாலி. தான் வளர்ந்த மொத்கூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் தான் கற்றதையும், அனுபவமாகப் பெற்றதையும் நினைவுக்குக் கொண்டு வந்தார். இந்தியப் பெண்களுக்கும் விவசாயத்துக்கும் அவ்வளவு பெரிய தூரம் இல்லை.

இங்கே உள்நாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெண்கள் விவசாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் படித்து வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட இந்தியப் பெண் ஒருவர் விவசாயத்தைக் கையில் எடுத்தால் அது இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் லட்சியத்தால் தோற்றுவிட்டு சாக்குப்போக்குக்காக ஏதோ செய்வதாகக் கருதப்படுகிறது. இந்த மனப்பாண்மையிலிருந்து வெளியில் வந்தது எவ்வாறு என்று கேட்டால்...

"ஒரு விவசாயியின் மகளுக்கு மண்ணின் மணம் மறக்குமா? மேலும் என் தந்தை விவசாயம் செய்துதான் வாழ்ந்தார். என்னையும், என் உடன்பிறந்தோரையும் வளர்த்து ஆளாக்கினார். அந்த விவசாயிக்கு நான் செலுத்தும் அஞ்சலி இதைவிட வேறேதாவது பெரிதாக இருக்க முடியுமா?" என்று கேட்கிறார். வைஷாலி, தெலங்கானாவின் ஓஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துளிர்க்கும் வேர்கள்...

வைஷாலி தற்போது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் காய்கறி சாகுபடி செய்கிறார். பெரும்பாலும் இந்தியக் காய்கறிகளைப் பயிரிடுகிறார். இந்த நிலத்தை ஓர் அமெரிக்க விவசாயியிடமிருந்து வைஷாலி குத்தகைக்குப் பெற்றுள்ளார். தனது விவசாயப் பண்ணைக்கு அவர் 'துளிர்க்கும் வேர்கள்' (Sprouting Roots) எனப் பெயரிட்டுள்ளார். அண்மையில் இவர் அமெரிக்க காய்கறி வகைகளையும் பயிரிட ஆரம்பித்துள்ளார். அதிலும் நல்ல மகசூல் கிடைக்க உள்ளூர் சந்தையில் அவரது வேளாண் உற்பத்திகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர், தவறினால் அக்டோபர் இறுதி வரையிலும் பயிரிட முடியும். அதன்பின்னர் பனிப்பொழிவு ஏற்பட்டுவிடும். அந்தக் காலகட்டத்திற்குள் அத்தனை நேர்த்தியாக விவசாயம் செய்துவிடுகிறார். வைஷாலி தோட்டத்து காய்கறிக்கு இந்திய சமூகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இத்தனைக்கும் இடையில் வைஷாலி கணினி வேலையையும் பார்த்து வருகிறார். வைஷாலியின் விவசாயக் கனவுக்கு அவரது கணவர் ஸ்ரீதர் மொகுல்லா உறுதுணையாக இருக்கிறார். வைஷாலியின் தோட்டத்து மணம் வெர்ஜினியா மாகாணத்தின் லவ்டன் கவுன்டி பொருளாதார மேம்பாட்டுத் துறை வரை எட்டியுள்ளது. இத்துறை குழந்தைகள் மத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியைச் செய்கிறது. அவர்களுக்கு ஆண்டுதோறும் சில விவசாயிகளைத் தேர்வு செய்து அடையாளப்படுத்துகிறது.

இந்த அமைப்பு வைஷாலியைப் பாராட்டியுள்ளது. இந்த கவுன்டியால் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 விவசாயிகளில் இவர் மட்டும் தான் இந்தியர். வைஷாலியின் புகழால் பள்ளியில் அவரது மகளும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் வேர் தான் காரணம் என பெருமிதம் பொங்க சொல்கிறார் வைஷாலி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in