Published : 09 Feb 2022 06:49 PM
Last Updated : 09 Feb 2022 06:49 PM

உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கலாமா? - மருத்துவர் ஆலோசனை

எனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால், நான் ஒரு Poor eater. அதனால் டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது? - சசிகலா, மின்னஞ்சல்

சித்த மருத்துவர் கு. சிவராமன்: முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Poor eater என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, உங்கள் எடை குறைப்புக்குச் சாதகமானதல்ல. சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும்.

தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக் கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.

வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.

- 'நலம் வாழ' பகுதியிலிருந்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x