Last Updated : 23 Mar, 2018 10:21 AM

 

Published : 23 Mar 2018 10:21 AM
Last Updated : 23 Mar 2018 10:21 AM

ஒரு சிக்ஸருக்கு 14 ஆண்டுகள்!

தமிழ் சினிமாவில் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர் நடிகர் விக்ரம். அண்மைக் காலத்தில் கிரிக்கெட்டில் அப்படி ஒருவரைக் கைகாட்ட வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக்தான் அதற்குச் சரியானவர். 2004-ம் ஆண்டில் தொடங்கி அணியில் போவதும் வருவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட்டில் தனக்கெனத் தனிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற 14 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டது.

டோனிக்கு மாற்று

நயன் மோங்கியா விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த வேளையில் 2000-களின் தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் அணியில் இடம்பிடிக்கத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகள்தான் சென்றிருக்கும். அடுத்ததாக, தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டு அணியில் விக்கெட் கீப்பராக இடம்பிடித்தார். அதன்பின் இருவரும் மாறிமாறி அணியில் இடம்பெற்றுவந்தார்கள். 2004-05-ம் ஆண்டில் மகேந்திர சிங் டோனி அணியில் இடம்பிடித்த பிறகு இவை எல்லாமே மாறின. அதிரடி ஆட்டப் பாணியைக் கடைப்பிடித்தார் டோனி.

இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்கள் யாரும் டோனி அளவுக்கு அதிரடியாக விளையாடியதில்லை. அந்தப் பாணி அணியில் அவருக்கான இடத்தை நிரந்தரமாக்கியது. அதிரடி ஆட்டத் தன்மைக்குப் பொருந்தாத பார்த்திவ் பட்டேலும் தினேஷ் கார்த்திக்கும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன்பின் இவர்கள் டோனிக்கு மாற்று வீரர்களானார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.

அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. ஆனால், 2007 அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்தது. அந்த ஆண்டில் மட்டும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். டோனி விக்கெட் கீப்பராக விளையாட, தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி தினேஷ் கார்த்திக் கவனம் ஈர்த்தார். அந்த ஆண்டில் 1 டெஸ்ட் சதம், 6 அரை சதங்கள் விளாசினார்.

அதன்பின் தொடர்ந்து அணியில் இருந்திருக்க வேண்டியவர். ஆனால், டெஸ்ட் அணியில் அவருக்குத் தொடர்ந்து இடம் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்தான். ஒரு நாள் அணியிலும்கூட 2010-ம் ஆண்டில் மட்டுமே 15 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பல சந்தர்ப்பங்களில் 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். ஆனால், 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார். பெவிலியனில் உட்கார்ந்துகொண்டிருப்பார்.

2015-ம் ஆண்டில் டோனி டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொன்னவுடன், அந்த இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், உள்நாட்டுத் தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே விளையாடிவந்த நேரம் அது. அதனால், அந்த வாய்ப்பு அவருக்கே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், டோனிக்குப் பிறகு அந்த வாய்ப்பு விருத்திமான் சகாவுக்குச் சென்றது. வெவ்வேறு ஆண்டுகளில் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த சகாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்க மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் லாபியே காரணம்.

கிடைத்த வாய்ப்பு

விளைவு, ஒரு நாள் போட்டிகளில் டோனிக்கு மாற்றாகவோ, கோலி, தவான், ரோஹித் போன்ற வீரர்களின் ஓய்வு காரணமாகவோ மாற்று வீரராகத்தான் அணியில் இடம் பிடித்துவருகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால், அப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சில சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்தியும் இருக்கிறார்; வீணடித்தும் இருக்கிறார். அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில்கூட ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் பெவிலியனில் இருந்தபடி போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக முழுமையாகப் பங்கேற்றது, அண்மையில் நடந்து முடிந்த இலங்கை சுதந்திர தினக் கோப்பைத் தொடரில்தான். இந்தத் தொடரில் சீராக விளையாடிவர், இறுதிப் போட்டியில் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தால் முத்திரை பதித்திருக்கிறார்.

23CHDKN_DK2right

14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற ஏமாற்றம், அவமானம், ஏளனம், ஆற்றாமை, விரக்தி, சோகம் என அனைத்தையும் ஒற்றைப் போட்டியில் தினேஷ் கார்த்திக் துடைத்தெறிந்திருக்கிறார். ஒரே ஒரு பந்தை எதிர்கொள்ள மட்டுமே வாய்ப்பு என்றால், அந்தப் பந்தை சிக்ஸராக மாற்று என்பதே அதிரடி கிரிக்கெட்டின் அடிப்படை. அப்படி ஒரு சிக்ஸரை விளாச தினேஷ் கார்த்திக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

ஒரு போட்டியின் மூலம் தேசம் கொண்டாடும் ஹீரோவான தினேஷ் கார்த்திக்கு, இனிவரும் காலங்களிலாவது தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்குமா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 33 வயதை எட்டிவிட்ட அவருக்கு, தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தால், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஓரளவாவது முழுமைபெறும்.

அன்று 18 பந்தில் பூஜ்ஜியம்!

கடந்த டிசம்பரில் தர்மசாலாவில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் இரண்டாவது ஆட்டக்காரராகக் களமிறங்கினார். 18 பந்துகளை எதிர்கொண்டார். ஒரு ரன்கூட எடுக்காமல் ஏமாற்றமடைந்தார். அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் என்ற சோகமான சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

ஆனால், கடந்த ஞாயிறன்று பங்களாதேஷுக்கு எதிராக வெறும் 8 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களைக் குவித்து இலங்கை சுதந்திர தினக் கோப்பையை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்து, ஹீரோவாக மாறியிருக்கிறார். கிரிக்கெட்டில் அன்றைய நாள் யாருடையதாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x