Published : 10 May 2024 08:34 PM
Last Updated : 10 May 2024 08:34 PM

“பேரிடர் காலத்தில்தான் செவிலியர்கள் சிந்திக்கப்படுகிறார்கள்” - குன்றக்குடி அடிகளார் பேச்சு @ மதுரை

மதுரையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உரையாற்றினார்

மதுரை: “மனிதகுலத்தின், பேரிடர் காலத்தில்தான் செவிலியர்கள் சிந்திக்கப்படுகிறார்கள்” என மதுரையில் நடந்த சர்வதேச செவிலியர் தின விழாவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “மனிதகுலத்தின் பேரிடர் காலத்தில்தான் செவிலியர்கள் சிந்திக்கப்படுகிறார்கள். இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள்தான் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பேரிடர்காலத்தில் அவர் செய்த பணிகளை நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் உருகும். செவிலியர் பணி கடினமான பணியல்ல, எவராலும் நினைத்துப்பார்க்க முடியாத பணி.

மலக்குவியல் மேல் நின்றுகொண்டு மனிதநேயப் பணியாற்றிய மங்கைதான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இத்தாலியில் பிறந்த அவர் ரஷ்யப் போரின்போது ராணுவவீரர்கள் கழிவுக் கிட்டங்கியில்தான் படுத்துறங்கினார். அந்த கழிவுக்கிடங்குகளில் முகம் சுளிக்காமல் மனிதக் காயங்களுக்கு மருந்திட்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அந்த உருவத்தில்தான் உங்கள் ஒவ்வொருவரையும் இந்த நிர்வாகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. செவிலியர்தான் அன்னையர், அன்னையர்தான் செவிலியர்.

இருவருக்கும் வேறுபாடு கிடையாது. திருச்சிராப்பள்ளி மலையிலிருக்கும் இறைவன் பெயர் தாயுமானவன். அங்குள்ள இறைவன் தாயும் ஆகிவிட்டார். ஒரு ஆண் எப்படி தாயாக முடியும். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தில் ஒருகரையில் மகள் பிரசவ வலியால் துடிக்கிறார். மறுபுறம் அக்கரையிலுள்ள அந்த மகளின் தாய், பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் மகளுக்கும் வைத்தியம் பார்க்க முடியவில்லையே என இறைவனை நினைத்து வருந்துகிறார்.

இப்போதுபோல் அப்போது 108 ஆம்புலன்ஸ் இல்லை, பிரசவ மருத்துவமனை இல்லை. அப்போது மலைக்கோட்டையில் இருக்கும் இறைவன் அந்த தாயின் உருவம் எடுத்தார், தாயாக சென்று அந்த ஏழைப்பெண்ணுக்கு வைத்தியம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. எண்ணிப்பாருங்கள் சகோதரிகளே, ஒரு ஆண் எப்போது தாயாக முடியும். கருவை சுமக்கும் பெண் தாயாக முடியும். அது இறைவன் தந்த கொடை. கருப்பையை சுமக்கும் பெண் தாயாக முடியும் என்றால் இதயத்தில் கருணையை சுரந்தால் ஆணும் தாயாக முடியும்.

அதனால் தான் இறைவன் அங்கு தாயுமானவனாக மாறினார். பெண்ணின் சிறப்புக்கு மிகப்பெரிய உதாரணம் கண்ணகி. பாண்டிய நாட்டில் அவரது கணவன் கோவலன் கொல்லப்படுகிறார். அநீதி இழைத்தவுடன் கண்ணகி, பாண்டிய மன்னனையும், மக்களையும், மதுரையையும் பார்த்து 3 கேள்வி கேட்பார். அதில் முதல் கேள்வி ‘பெண்டிரும் உண்டுகொல்,பெண்டிரும் உண்டுகொல்’ எனக் கேட்பார் அதாவது இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா? எனக் கேட்பார்.

இரண்டாவதாக சான்றோரும் உண்டுகொல், மூன்றவதாக தெய்வமும் உண்டுகொல் எனக் கேட்பார். எல்லாவற்றுக்கும் முதலாவதாக ஏன் பெண்களைச் சொல்கிறார் என்றால் இந்த நாட்டில் பெண்கள் இருந்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது, களவு நடக்காது, காவல் நிலையங்களுக்கு வேலை இருக்காது என்பார். நல்ல பெண்மணிகள் இருக்கும் நாட்டில் குற்றங்கள் குறையும்.களவு நடக்காது. சிறப்புக்குரிய மற்றொரு பெண் மதுரை மண்ணை ஆண்ட மங்கையர்க்கரசி. இங்கு சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர். தமிழ்ப்பண்பாட்டை விட்டு விலகிச்சென்ற மன்னனையும் மக்களையும் மடைமாற்றி நாட்டின் புதிய வரலாற்றை எழுதுகிறார். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்பது வெற்று வார்த்தையல்ல, அதுதான் வாழ்க்கை.

செவிலியர்கள் ஒவ்வொருவரும் நினைந்து ஊட்டும் தாயாக இருக்கிறார்கள். கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து தியாகம் செய்தவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்தான். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்கடன் பணி செய்து கிடப்பதே என செயல்படுபவர்கள்தான் செவிலியர்கள். அப்படி பணி செய்கிற செவிலியப் பெருமக்களை அவர்களுக்குரிய நாளில் வாழ்த்தி மகிழ்வோம்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பி.கண்ணன் தலைமை வகித்தார். நர்சிங் கண்காணிப்பாளர் சுகுணாலோச்சினி முன்னிலை வகித்தார். முடிவில் பணியாளர்துறை பொதுமேலாளர் கே.அழகுமுனி நன்றி கூறினார். கவிஞர் பொற்கைபாண்டியன் ஒருங்கிணைத்தார். மருத்துவ இயக்குநர் செயலர் சுந்தரராஜன் ஏற்பாடு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x