Last Updated : 05 May, 2024 04:08 AM

 

Published : 05 May 2024 04:08 AM
Last Updated : 05 May 2024 04:08 AM

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழும் பொதுமக்கள்

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வீரபாண்டி தடுப்பணையில் குடும்பத்துடன் குளித்து மகிழும் பொதுமக்கள்.படம்: என்.கணேஷ்ராஜ்.

தேனி: தேனியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பலரும் வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ்கின்றனர்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் குமுளி மலையில் சரிவாக உள்ள 4 ராட்சத குழாய்கள் வழியே தரைப்பகுதிக்கு வருகிறது. பின்பு கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக வைகை அணைக்குச் செல்கிறது. இந்த ஆற்றின் வழிநெடுகிலும் தடுப்பணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியிலும் ஒரு தடுப்பணை உள்ளது. தற்போது தேனி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

மேலும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கமும் நேற்று தொடங்கியுள்ளது. இதனால், கடும் புழுக்கம் இருந்து வருகிறது. தற்போது கல்வி நிலையங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்துடன் இந்த தடுப்பணையில் நீராடி வெயிலின் தகிப்பை சமாளித்து வருகின்றனர். தற்போது முல்லை பெரியாறு அணையில் விநாடிக்கு 105 கன அடி நீரே திறக்கப்பட்டுள்ளது.

வழிநெடுகிலும் உள்ள குடிநீர் திட்டங்களுக்காக இந்த நீர் பெறப்படுகிறது. மேலும் மணல் வெளிகளிலும் நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், வீரபாண்டிக்கு குறைவான நீரே வருகிறது. இந்த நீர் ஆழம், இழுவை இன்றி லேசான ஓட்டத்துடன் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. இதனால் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x