Last Updated : 02 May, 2024 04:13 PM

 

Published : 02 May 2024 04:13 PM
Last Updated : 02 May 2024 04:13 PM

கோடையில் கூடும் சிறுநீரகக் கல் பிரச்சினை: தவிர்ப்பது எப்படி? - ஒரு வழிகாட்டுதல்

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. ‘உடலின் தூய்மைப் பணியாளர்’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. மற்றப் பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது, கோடைக் காலத்தில் இவற்றின் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து உணவு முறையைச் சரி செய்துகொண்டால், இந்தத் தொல்லைகளைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.

காரணம் என்ன? - சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் சில முக்கியக் காரணிகள்:

# அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது
# போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது
# உடலில் ஏற்படும் நீர் வறட்சி
# தவறான உணவு முறைகள்
# உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது
# சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது
# உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது
# சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது
# பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது
# புராஸ்டேட் சுரப்பி வீக்கம்
# உடல் பருமன்
# பரம்பரை காரணி

சிறுநீகரக் கல் உருவாவதைத் தடுக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம். அவை:

வெயிலில் அலையாதீர்கள்! - பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்து கொள்ளலாம்

உப்பைக் குறைக்கவும்! - உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 2.5 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) போதும். சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவு உணவு, பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

எதைச் சாப்பிடக் கூடாது? - காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக் கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.

உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக் கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவை குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான் இந்த எச்சரிக்கை!

தண்ணீர் அருந்துங்கள்! - வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்). பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்? - சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும். முழுமையாக வாசிக்க > சிறுநீரகக் கல் - அறிகுறிகள் முதல் சிகிச்சை வரை

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x