Last Updated : 28 Apr, 2024 09:37 AM

1  

Published : 28 Apr 2024 09:37 AM
Last Updated : 28 Apr 2024 09:37 AM

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்: உடல் உழைப்பு தொழிலாளர்கள் வெப்ப அலையால் அவதி

சென்னை சவுக்கார்பேட்டை பகுதியில் கடும் வெயிலுக்கு நடுவே பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலார். படம்: ஆ.ரோஷினி

ஆ.ரோஷினி / சீ.ஹரிணி

சென்னை: கோடைகாலம் தொடங்கியதில் இருந்து சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் காலம் மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பே சென்னை மாநகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன் ஹீட் வெயில் பதிவாகிறது. வெயிலுக்கு அஞ்சி பொதுமக்கள் பகலில் வெளியில் வருவதை தவிர்த்து விடுகின்றனர். பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியில் வர வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், கடும் வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர் இழப்பு, சோர்வு, தலைச் சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு உடல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெப்பத்தால், வெப்ப வாதம் ஏற்பட்டு மரணத்தை கூட விளைவிக்கலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் ஏப்.30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களை வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், “வெப்பம் அதிகமாக இருக்கும் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். நீரிழப்பு ஏற்படாமல் இருக்க போதுமான அளவு நீரை பருக வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

எனினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்தால் மட்டுமே வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

இது குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை யானைக்கவுனி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி நடராஜன் கூறும்போது, “வழக்கத்தை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாகவே உள்ளது. பகல் வேளையில்தான் எங்களுக்கு வேலை. வெயிலில் வேலை செய்வதால் கண்கள் இருண்டு, பார்வை மங்கிவிடும். இரவில் ஒற்றைத் தலைவலியுடன் உறங்கச் செல்ல வேண்டி இருக்கும்.

அதிக வியர்வை காரணமாக உடலில் துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொடை இடுக்குகளில் தோல் நோய், அரிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறோம். இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுக்கும் மருந்துகள் வேலை செய்வதில்லை. ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு, பெரிய மருத்துவ மனைக்கு சென்று தோல் நோய் சிறப்பு மருத்துவரை பார்த்து மருந்து வாங்கினால் தான் வேலை செய்கிறது” என்றார்.

சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள பூ வியாபாரி சித்ரா கூறும்போது, “பூ வியாபாரத்துக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்கிறேன். இப்பகுதியை சுற்றி காலை 11 மணிக்கே அனல் வீசுகிறது. கடும் வெயிலால் தாகம் அதிகரிக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும தாகம் அடங்கவில்லை. சிறுநீர் கழிக்கும்போது கடும் எரிச்சல் ஏற்படுகிறது” என்றார்.

10 நிமிடம் கழித்து..: கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை தடுப்பது குறித்து பொதுநல மருத்துவர் தனசேகரன் கூறும்போது, “வெயில் காலத்தில் தண்ணீர், மோர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம். வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

பணி முடிந்தவுடன் குளிப்பது, உடலின் மறைவான பகுதிகளை சோப்பு போட்டு தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் தோல் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். பொதுமக்கள் வெயிலில் வெளியே சென்று விட்டு, வீடு திரும்பிய உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x