விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்
Updated on
1 min read

சென்னை: இண்டிகோவின் விமானியாக இருப்பவர் பிரதீப் கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் பிரதீப் கிருஷ்ணன், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் விமானம் புறப்படும் முன் பயணிகளிடம் பேசுகிறார். அப்போது, “என்னுடன் எனது குடும்பத்தினர் பயணம் செய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் தாத்தா, பாட்டி, அம்மா விமானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இன்று நான்தான் விமானத்தின் கேப்டன் என்பது அவர்களுக்கு தெரியாது.

என் தாத்தா இன்று என்னுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கிறார். பலமுறை அவரது டிவிஎஸ்50-யில் அவருடன் உட்கார்ந்து சென்றுளேன். இன்று அவருக்கு விமானம் ஓட்ட போகிறேன்.

தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு விமானியின் கனவு. அந்த வகையில் இன்று எனக்கு நெகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணன் பேசும்போது அவரின் தாய் நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இப்படி விமானத்தில் பயணிக்கும் தனது குடும்பத்தினரை பிரதீப் கிருஷ்ணன் வரவேற்ற வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in