Published : 10 Sep 2023 04:35 PM
Last Updated : 10 Sep 2023 04:35 PM

படுக சமுதாயத்தில் இருந்து பறக்கும் முதல் பெண் விமானி ஜெயஸ்ரீ!

கோத்தகிரி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்களை பொதுப் பிரிவு பட்டியலில் இருந்து நீக்கி, பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர், கப்பல் படை, ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த ஜெய ஸ்ரீ என்ற இளம் பெண், விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்தவர் மணி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவி மீரா. இவர்களுடைய மகள் ஜெய ஸ்ரீ. இவர் பள்ளிப் படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர், சில ஆண்டுகள் ஐ.டி துறையில் பணியாற்றினார். அதன் பின்னர் விமானியாக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப் பிரிக்காவில் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார்.

ஜெய ஸ்ரீ

இது குறித்து ஜெய ஸ்ரீ கூறியதாவது: எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டத்துக்கோ, மாநிலத்துக்கோ பெண்களை படிக்க அனுப்பவே பெற்றோர் தயங்கும் நிலை இருந்தது. இச்சூழலில் மற்றொரு நாட்டுக்கு விமானப் பயிற்சி பெற என்னை தைரியமாக எனது பெற்றோர் அனுப்பி வைத்தனர். அதேபோல் பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா? என பலர் கேள்வி எழுப்பிய போது, பெண் குழந்தைக்குத்தான் இவ்வளவு செலவு தேவை என ஆணித்தரமாக என் பெற்றோர் கூறினர்.

பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள். வழக்கமான வேலைகளை விட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளன. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை, மன நிலை பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும்.

எனவே, உடல்நிலை மற்றும் மன நிலையை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இந்தப் பணியில் நான் சேர முக்கியக் காரணம், எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் தான். எங்கள் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x