

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் வானில் சாகசம் செய்யும் போர் விமானங்களைப் பார்த்து பரவசப்பட்டதுண்டா? தேசத்தின் பாதுகாப்பில் வீரத்துடன் செயல்பட்ட விமானப்படை விமானி அபிநந்தனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அவரைப்போல நீங்களும் போர் விமானி ஆகி தேசத்தின் காவல் வீரராக வேண்டுமா?
இந்திய விமானப்படையில் போர் விமானியாகப் பல வழிகள் உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு கல்வித்தகுதிகள் தேவை.
1. பிளஸ் 2 முடித்தவர்கள் விமானியாகலாம். உண்மைதான். இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை பிளஸ் 2-வில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வை எழுதலாம்.
2. கலை/அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விமானியாகலாம். பிளஸ் 2-வில் இயற்பியல், கணித பாடங்களை படித்திருப்பது கட்டாயம்.
3. ஏதாவது ஒரு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விமானியாகலாம்.
4. தேசிய சாரணர் படையில் (NCC), விமானப்படைப் பிரிவில் சி-சான்றிதழ் பெற்ற பட்டதாரிகள் விமானியாகலாம்.
5. பயிற்சி முடித்து வர்த்தக விமானி உரிமம் (Commercial Pilot License) உள்ள பட்டதாரிகள் விமானப்படையில் விமானியாகலாம்.
விமானியாக எழுத வேண்டிய தேர்வு
1. தேசியப் பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வு: பிளஸ் 2 முடித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் 19.5 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். யூபிஎஸ்சி தேர்வாணையம் ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வை நடத்துகிறது. மஹாராஷ்ட்ரா புனே நகரில் கடகவாசலா ஏரிக் கரையில் மிக அழகாக அமைந்துள்ள என்.டி.ஏ. கல்லூரியில் மூன்றாண்டுகள் பயிற்சியும் பிறகு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் பி.டெக்., பட்டமும் வழங்கப்படும்.
2. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தேர்வு (CDS): கலை, அறிவியல், பொறியியல் பட்டம் பெற்ற 24 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மட்டுமே (மாணவிகள் எழுத முடியாது) இந்தத் தேர்வை எழுத முடியும்.
3. என்.சி.சி.-சிறப்பு நுழைவு: இத்தேர்வில் என்.சி.சி-சி சான்றிதழ் பெற்ற அல்லது வர்த்தக விமானி உரிமம் உள்ள 24 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத ஆண்களும் பெண்களும் பங்கேற்கலாம்.
4. விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT): கலை, அறிவியல், பொறியியல் பட்டம் பெற்ற 24 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இந்தத் தேர்வை எழுதலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறுகியகாலப் பணி (Short Service) என்றழைக்கப்படும் 14 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும்.
பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களைப் படித்திருப்பது அவசியம் என்பது விமானியாகும் கனவில் உள்ள ஒவ்வொரு மாணவனும் மாணவியும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி. மேலும் விவரங்களுக்கு https://indianairforce.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
விமானப்படையில் விமானியானால், போர்விமானங்கள், போர்ஹெலிகாப்டர்களை இயக்கிப் போரிடும் வாய்ப்பு மட்டுமின்றி, எல்லை காக்கும் வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சரக்குகளைக் கொண்டு செல்லும் போக்குவரத்து விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இயக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
விண்வெளி வீரர்
விமானப்படையில் விமானியானால் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். இந்தியாவில் விமானப்படை விமானிகளே, விண்வெளி வீரர்களாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்ராகேஷ் சர்மா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் இந்திய விமானப்படையின் விமானி என்பது தெரியுமா? இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் அனைவரும் இந்திய விமானப்படை விமானிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குள் இருக்கும் விமானி கனவு சிறகடிக்க வாழ்த்துகள்!
(தொடரும்)
கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com