Last Updated : 03 Apr, 2024 06:20 AM

 

Published : 03 Apr 2024 06:20 AM
Last Updated : 03 Apr 2024 06:20 AM

போர்களின் விளைவை சொல்லும் ‘ஸ்திரீ பர்வம்’ - மீண்டும் அரங்கேறும் நாடகம்

‘ஸ்திரீ பர்வம்’ நாடகத்தில் ஒரு காட்சி

போர்கள் குறித்த பார்வையை பெண் மைய நோக்கில் அணுகும் நாடகம் ‘ஸ்திரீ பர்வம்’. இதிகாசப் போர்கள் முதல் உக்ரைன், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் போர்கள் வரை, அறமற்ற தாக்குதல்களின் விளைவை இந்த நாடகம் கண்முன் நிறுத்துகிறது.

நீண்டு விரியும் துணி, நம்மண், புவி, வாழ்வு, வரும் தலைமுறைக்கு நாம் கையளிக்க வேண்டியது. சிதறிக் கிடக்கும் கூத்து அணிகலன்கள், குவியும் சடலங்கள்; இறுதிச் சடங்கை எதிர்நோக்கி இருக்கும் சவக்குவியல்கள். கூத்திசையில் தொடங்கி, அராபியத்தாலாட்டு, ராப் என இசையின் பல பரிமாணங்கள், பல வெளிகளில் நம்மைப் பயணிக்க உதவுகிறது. காட்சிப் படிமங்களும், பொருத்தமான காணொலிகளும் நாடகத்தோடு ஒன்ற துணை புரிகின்றன.

அபிநயா ஜோதி, அபு ஆசினி, அறிவழகன், பிரம்மி நிவேதிதா, ஃபாமிதா, சவுமியா, ஜித் சுந்தரம், தமிழரசன், விஜய்லஷ்மி கண்ணன், யாழ் இனியாள் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.

ஜோர்டானில் வசிக்கும் பாலஸ்தீனிய கலைஞர் தாரா ஹக்கீம் மற்றும் குழுவினர், உக்ரைனில் ஒடுக்கப்பட்டோர் அரங்கச் செயல்பாட்டாளராக விளங்கும் யனா சரகோவா, இலங்கையின் பெண்ணியச் செயல்பாட்டாளர் சரளாஇமானுவேல், ரெட் கர்ட்டன் இன்டர்நேஷனல் குழு, இந்து வஷிஷ்ட் ஆகியோரின் முயற்சியால் இந்த நாடகம் சாத்தியம் ஆகியிருக்கிறது.

மங்கையின் பனுவல், நெறியாள்கை, அனுகூலமான நிலையிலிருந்து நம்மை நகர்த்தி, யதார்த்தத்தின் குரூரமான முகத்தை தரிசனப்படுத்துகிறது.

மரப்பாச்சி, செய்தித்தொடர்பு மையம், ம.சா.சுவாமிநாதன் ஆய்வுநிறுவனம் தயாரித்துள்ள இந்த நாடகம், மீனா சுவாமிநாதன் நினைவாக அண்மையில் நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் ஏப்.6, (மாலை 5.30 மணி) 7-ம் தேதிகளில்(மாலை 6 மணி) தரமணி, ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் வளாகத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கத்தில் மீண்டும் அரங்கேறுகிறது. (தொடர்புக்கு: 99402 02605, 98846 61481)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x