Published : 09 Mar 2024 06:28 AM
Last Updated : 09 Mar 2024 06:28 AM

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் ஸ்ரீவில்லி.யில் கண்டெடுப்பு

களத்தூர் அர்ச்சுனா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், சிவப்பு ஓடுகள் மற்றும் இரும்பு தாதுக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் அர்ச்சுனா ஆற்றங்கரையில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாப்பட்டி ஊராட்சி களத்தூர் அர்ச்சுனா ஆற்றங்கரையில் பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாப்பட்டியைச் சேர்ந்த வீரையா அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு மற்றும் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின் அவர்கள் கூறியதாவது: திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப் படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளைத் தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார்.

முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீட மகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். அந்தச் சிற்பம் 109 செ.மீ உயரம் உள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்த கன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளைத் தொடையில் வைத்திருக்கிறார்.

சிற்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300 மீட்டர் தூரத்தில் இரண்டரை அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். அந்தக் காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக்கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம்.

மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன.இதன்மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடி யிருப்பும் இருந்துள்ளன எனலாம்.

மேலும், இதன் அருகே மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் மடை ராஜேந்திர சோழன் மடை என குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் ஏற்கெனவே, 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

சேர நாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெரு வழியில் இந்த ஊர்கள் இருந்ததால் வரலாற்றுச் சிறப்புமிக்க இப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x