Published : 01 Jan 2024 06:57 AM
Last Updated : 01 Jan 2024 06:57 AM

திருவாரூரில் 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து மூதாட்டி சாதனை: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு

திருவாரூரில் 45.59 நிமிடங்களில் 108 முறை சூரியநமஸ்காரம் செய்து சாதனை படைத்த மூதாட்டி சரஸ்வதி.

திருவாரூர்: திருவாரூரில் 81 வயது மூதாட்டி 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த ஜெயராமன்(91) மனைவி சரஸ்வதி(81). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், யோகா பயிற்சியாளராக உள்ள இவரது 2-வது மருமகள் பிரேமாவிடம்(50) கடந்த 10 ஆண்டுகளாக ஜெயராமன், சரஸ்வதி ஆகியோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். 2018-ல் இந்த தம்பதி 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல்இடம்பெற்றனர்.

இந்நிலையில், சரஸ்வதி நேற்று முன்தினம் கீரனூரில் உள்ள வைநிதி சேவாலயா பயிற்சி மையத்தில் 45 நிமிடங்கள் 59 விநாடிகளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தார். அவருடன் இணைந்து, ஆன்லைன் மூலம் யோகா பயின்று வரும் மாணவ, மாணவிகளும் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்தனர்.

இந்நிகழ்வை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சார்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடுவர் சகாயராஜ் பங்கேற்று, பதிவு செய்தார். தொடர்ந்து, அந்த அமைப்பு சார்பில் சரஸ்வதிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சரஸ்வதி கூறும்போது, "எங்களை சுறுசுறுப்பாகவைத்துள்ள யோகாவை முதியோரும், இளைய தலைமுறையினரும் கற்றுக்கொண்டு, உடல் நலத்துடன் வாழ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x