உதகை முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்துடன் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்

படம்: ஆர்.டி.சிவசங்கர்
படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

உதகை: உதகை அருகே முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியின மக்கள் சார்பில் ‘மொற்பர்த்' என்றபுத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டு நாயக்கர், பனியர், இருளர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மாறாமல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். உடை, உணவு முறை, வழிபாட்டு முறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.

இதில் தோடரின மக்கள் உதகைமற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் இரண்டாயிரம் தோடர்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மொற்பர்த் பண்டிகை கொண்டாடப் படுவது வழக்கம். இதில், மாவட்டத்திலுள்ள தோடரின மக்கள் பங்கேற்பர்.

இந்தாண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலை குந்தா அருகே முத்த நாடு மந்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ மற்றும் ‘அடையாள் ஓவ்’ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால், தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர்.

எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோயின்றி வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டினர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். ஆண்கள் வழிபாடு நடத்தி முடிந்ததும், பெண்கள் கொண்டாட்டத்தில் இணைந்தனர். பின், தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடினர். இவர்களை தொடர்ந்து ஆண்களும் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

பின்னர், இளைஞர்கள் இளவட்ட கற்களை தூக்கி, தங்கள் இளமையை நிரூபித்தனர். இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. விருந்தை உண்டதும் பெண்கள் வரிசையாக வந்து, முதியவர்களின் பாதங்களை தொட்டு வணங்க, தங்கள் முறைப்படி வலது காலை தூக்கி அந்த பெண்களின் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.

விழா நிறைவடைந்ததும் பிரியா விடை பெற்று, தங்களது சொந்த மந்துகளுக்கு புறப்பட்டனர். விழாவில், தோடரின மக்களின் தலைவர் மந்தேஸ் குட்டன், அடையாள் குட்டன், சத்ய ராஜ், பீட் ராஜ், நார்தே குட்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in