Published : 01 Nov 2023 05:48 AM
Last Updated : 01 Nov 2023 05:48 AM

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த பாக். வீரர்கள்

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து இருந்து பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் பிரியாணி, கபாப் மற்றும் சாப் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரானபோட்டியில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா சென்ற பாகிஸ்தான் அணியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் உணவை தவிர்த்துவிட்டு கொல்கத்தா பிரியாணியை ருசித்து சாப்பிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள், ஜாம் ஜாம் உணவகத்தில் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த உணவகத்தின் இயக்குநர் கூறும்போது, “ஆரம்பத்தில், இந்த உணவு ஆர்டர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடமிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஏனெனில் இந்த ஆர்டர் ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் வந்திருந்தது. பிரியாணி, கபாப், சாப் என மூன்று உணவுகளை ஆர்டர் செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் இந்த ஆர்டர் வந்திருந்தது. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எங்களது உணவு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியினர் தங்களது விருப்பமான உணவுகளை வரவழைத்து விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க போட்டியில் அந்த அணியின் செயல் திறன் சிறப்பாக இல்லாததால் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணி வீரர்களின் உணவு முறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியினர் நாள் ஒன்றுக்கு 8 கிலோ வரை இறைச்சி உண்பதாகவும், வீரர்கள் உடற்தகுதியுடன் இல்லை எனவும்குற்றம் சாட்டினார். மேலும் வீர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடற்தகுதி பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர், கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியினர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளது மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x