

மதுரை: இன்று (அக்.17) கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மதுரை மீதான பாசத்தை, பந்தத்தை மறக்கா மல் தனது பாடல்களில் வெளிப்படுத்தி மதுரைக்கு சிறப்பு சேர்த்துள்ளார் கவியரசர் கண்ணதாசன். திரைப்பட பாடல்கள் மூலம் கோடானுகோடி உள்ளங்களை கவர்ந்தவரும், அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். அனுபவக் கவிஞரான இவர் தொன்மையான மதுரை மீது தனி பாசம் கொண்டவர். அந்த பந்தத்தில் மதுரையை பல பாடல்களில் குறிப்பிட்டு பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து திரைப்பட ஆய்வாளரும், ஓய்வுபெற்ற சமூக நலத்துறை அதிகாரியுமான மதுரையைச் சேர்ந்த கு.கணேசன் கூறியதாவது: கவியரசர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர். அதிகம் படிக்கவில்லை என்றாலும், அவரது பாடல்களில் விளையாடும் தமிழ் வார்த்தைகளை எண்ணி மெத்தப்படித்த மேதாவிகளும் வியப்படைவர். அவர் தொடாத துறைகளும் இல்லை, வெளிப்படுத்தாத உணர்வுகளும் இல்லை. அந்த வகையில் தமது அனுபவங்களையே பாடல்களாக வார்த்ததால் காலம் கடந்தும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது.
அவர் மதுரையின் மீது அதிக பற்று கொண்டு பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ‘ப’ வரிசையில் படம் எடுத்து வெற்றிகண்ட இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த வெற்றிப்படங்கள் உள்ளன. அதில், பாவ மன்னிப்பு படத்தில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ‘சாயவேஷ்டி தலையில் கட்டி, சந்தனம் முழுவதும் மார்பில் கொட்டி’ என்ற பாடலில் மதுரையை மையமாக வைத்து எழுதினார். 1961-ல் மே மாதம் வெளியான ‘பாசமலர்’ அண்ணன், தங்கை பாசத்தை உணர்த்தும் படம். இதில், ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலில், ‘பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே’ என்று எழுதி உள்ளார்.
அதேபோல், 1961-ல் செப்டம்பரில் வெளியான ‘பாலும் பழமும்’ படத்தில், ஒருநாள் அதிகாலைப் பொழுதில் மதுரைக்கு ரயிலில் வந்தபோது மீனாட்சி அம்மன் கோயில் மணியோசையும், பறவைகள் எழுப்பும் ஓசையும் கேட்டுள்ளார்.அதனையே ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்’ என்ற பாடல் வரிகள் பிறந்தன.
அதேபோல், 1967-ல் வெளியான ‘பாமா விஜயம்’ படத்தில் ‘ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே’ என்று எழுதியிருப்பார். இதில் மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள நகைக்கடைகளை மனதில் வைத்தே எழுதியிருப்பார். இப்படி மதுரைக்கும் கவியரசுக்கும் இடையேயான மதுரை பந்தத்தை அவரது பாடல்களில் காணலாம். இவ்வாறு கணேசன் கூறினார்.