Last Updated : 12 Oct, 2023 08:27 PM

 

Published : 12 Oct 2023 08:27 PM
Last Updated : 12 Oct 2023 08:27 PM

விழுப்புரம் 30 | மது கடத்தல்... தொன்று தொட்டு தொடரும் சிக்கல்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, 30 வது ஆண்டில் கடந்த மாதம் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பது குறித்து பல்வேறு நிலைகளில் ஆராயப்பட்டு. நமது சிறப்புப் பகுதியில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையை தொடர்ச்சி....!

விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரியோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு மாவட்டமாகும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவிதமாக நற்பலன்களை விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரியில் இருந்து பெறுவதும், பலதுறைகளுக்கு தேவையான மனிதவளத்தை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி பெறுவதும் என நல்ல ஒரு உறவு இரு பகுதிகளுக்கும் இடையே உண்டு.

ஆனாலும், புதுச்சேரியில் விற்கப் படும் மதுவகைகளால் விழுப்புரத்தில் உள்ள காவல்துறை யினருக்கு கூடுதல் பணி அழுத்தம் ஏற்படுவதுண்டு. தரமான அந்த மதுவகைகளை தமிழகத்துக்குள் திட்டமிட்டு கடத்திவருவோரால் இங் குள்ள டாஸ்மாக்மது வணிகம் பாதிக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.

மற்ற மாவட்ட மதுவிலக்கு பிரிவினருக்கு கள்ளச் சாராய சிக்கல் என்றால், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு புதுச்சேரி மது கடத்தலை கட்டுப்படுத்துவது கூடுதல் பணியாகவே தொன்று தொட்டு வருகிறது.

இந்தச் சூழலுக்கு நடுவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக பணியாற்றியதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் ‘காந்தியடிகள் காவலர்’ விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். 2024 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

மொத்தமுள்ள மாவட்டத்தின் மதுவிலக்கு பிரிவினரின் சிறப்பான பங்களிப்பால் இந்த விருதுக்கு அவர் தேர்வாக, விழுப்புரம் மாவட்டத்துக்கு அது பெருமை சேர்க்கிறது.

மதுபான கடத்தலைத் தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் கெங்கராம்பாளையம், பனயபுரம், சிறுவந்தாடு, பெரும்பாக்கம், பட்டானூர், கிளியனூர், தொந்திரெட்டிபாளையம், அனிச்சங்குப்பம், கோட்டக்குப்பம் என 9 இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இச்சோதனைகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

“கடந்த 2022-ம் நிதியாண்டில் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்களுடன் 180 மி.லி அளவு கொண்ட 15,340 மதுபாட்டிகளும், 1,640 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்
புல்டவுசர் கொண்டு மரக்காணம் பகுதியில் அழிக்கப்படுகிறது.
கோப்பு படம்

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 549 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 180 மிலி அளவு கொண்ட 21,424 மதுபாட்டில்களும், 423 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவி புதுச்சேரி மது வகைகள் விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக கடத்தப்படுவதும் உண்டு. இக்கடத்தலில் காவல்துறையின் உயர் அதிகாரிகள், சினிமாநட்சத்திரங்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் எனஅனைத்து தரப்பினரும் ஈடுபட்டு,காவல்துறை சோதனையில் சிக்குவதும்உண்டு.

கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களைகாவல்துறையிடம் ஒப்படைக்காமல் அதைஒளித்து வைத்த காவல் துறையினரும் நடவடிக்கைகளுக்கு தப்பியதில்லை. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டு வருகிறது. இந்த மதுபான கடத்தலைப் பற்றி விழுப்புரம் மாவட்ட காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “விழுப்புரம் மாவட்டத்தில் மதுபானக் கடத்தலில் ஒரு பெரும் கும்பலே உண்டு.

இதில் முக்கிய பங்கு வகித்த ஆண்டியார்பாளையம் ராஜா, மரூர் ராஜா, கொடுக்கன்குப்பம் குமார், ஓங்கூர் முரளி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுபான கடத்தலில் கிங் பின்னாக (King pin) இருந்த புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த மனோவையும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட கிராம பகுதிகளில் நிலவும் கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு மதுவிலக்கு துறையினருக்கு உண்டு. கடந்த மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் இறந்த கோர நிகழ்வு நடந்தது.

அதன் பின் இம்மாவட்டத்தில் காட்டிய கெடுபிடிகளால், கள்ளச் சாராயம் சற்றே கட்டுக்குள் வந்துள்ளது. அந்த தொடர் நடவடிக்கையை பாராட்டியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த ‘காந்தியடிகள் காவலர்’ விருதுக்கு தேர்வாகி இருப்பதாக கருத வேண்டியது இருக்கிறது.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தின் மீதான அக்கறை கொண்ட நமது பார்வையுடன், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் சேர்ந்து, ‘விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்..’ அடுத்தடுத்த நாட்களில் தொடரும்.

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் விழுப்புரம் நகர மக்கள்: பின்புலம் என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x