Last Updated : 02 Oct, 2023 04:41 PM

 

Published : 02 Oct 2023 04:41 PM
Last Updated : 02 Oct 2023 04:41 PM

விழுப்புரம் 30 | விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்... பெறத் தவறியதும்..!

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் செப். 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும் என்பதை நேற்று தொடங்கி தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு என்னென்ன தேவை என்று மாவட்டத்தின் நலனில் அக்கறை உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான சிலிக்கான் மணல், அதற்கடுத்த நிலைகளில் கடின கற்கள், ஆற்று மணல், கிரானைட் கற்கள், செம்மண் வகைகள் கிடைக்கின்றன. விழுப்புரம் மாவட்ட கிரானைட் கற்களுக்கு சர்வதேச அளவில் தேவைகள் அதிகமாக உள்ளது.

இதை முறைப்படுத்தி இந்தத் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். மரபு வழி சார்ந்த நூற்பாலைத் தொழிலும், இங்கு நெய்யப்படும் லுங்கி வகைகளும் புகழ் பெற்றவை. செஞ்சி, கண்டமங்கலம், காணை மற்றும் முகையூர் வட்டாரங்கள் இத்தொழிலில் சிறப்புற்று விளங்குகின்றன. இதை இன்னும் மேம்படுத்த அரசு மானியங்களை வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாவட்டம் விழுப்புரம் ஆகும். இங்குள்ள ஆவின் நிறுவனத்தில் தரமான பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கறவை மாடுகள் வளர்ப்பதை மேலும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் நகர்ப்புற மயமாக்கலால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. ஆனால், இன்று வரையிலும் விழுப்புரம் மாவட்டத்தில் அந்தச் சிக்கல் இல்லை. இதை அரசு கவனத்தில் கொண்டு கறவை மாடுகள் வளர்ப்பதில் சிறப்பு சலுகைகள், மானியங்களை வழங்க வேண்டும்.

இம்மாட்டத்தில் மயிலம் மற்றும் மரக்காணத்தில் கிரானைட் தொழிற்சாலைகள் அதிகம். வானூர் வட்டாரத்தில் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. மரக்காணம் கடற்கரைப் பகுதியில் மீன், காய்கறி, உலர் பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகளும், வாய்ப்புகளும் அதிகம். இம்மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்து பிரதான இடம் பிடிப்பது மணிலா.

தொழில் வர்த்தகத்துக்கு ஏற்ற தேசிய நெடுஞ்சாலை, ரயில் சேவை போன்றவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளதால் இங்கு மேலும் அதிக தொழிற்சாலை மற்றும் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி போன்றவைகள் திறக்கப்பட்ட போதிலும், விவசாயிகள் அதிகம் வாழும் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி இல்லாதது பெரும் குறை. இதை நீண்ட காலமாக பலதரப்பில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் தேவைகள் குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொல்லியல், வரலாற்று சான்றுகளை அறியச் செய்யும் வகையில் திருவக்கரை, செஞ்சி, மரக்காணம் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைத்து தொல்லியல் சுற்றுலா பேருந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும். நாள்தோறும் விழுப்புரத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு அனைத்து தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களை கண்டு திரும்புமாறு ஏற்பாடு செய்தால் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமான இங்கு ஆண்கள், பெண்கள் கல்வி பெறுவதில் 17 சதவீதம் வேறுபாடு உள்ளது. கல்வியில் இடையில் நிற்போர் அதிகமாக உள்ளனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு என்று சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும். ஆதிதிராவிட நல பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் 3 சதவீத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து, அதன்மூலம் சுயசார்பு திறன் உடைய வேலைகள் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 98 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். விவசாயிகளுக்கு வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தீவிர விவசாய முறைகளுக்கு பயிற்சி அளித்து, தரமான விதைகளை வழங்கி, குறைந்த தண்ணீரில் சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்களை வழங்க வேண்டும்” என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கூறுகையில், “விவசாய உற்பத்தி சார்ந்த அரிசி, சர்க்கரை ஆலைகள் தவிர்த்து வேறு தொழிற்சாலைகள் ஏதும் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லை.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மணிலா உற்பத்தி அதிகமாக இருந்ததால் விழுப்புரம், திருக்கோவிலூரில் மணிலா எண்ணெய் பிழியும் ஆலைகள் அதிகம் இருந்தன. அதனால் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்துக்கு ‘மணிலா மாவட்டம்’ என்றே பெயர் இருந்தது. கடந்த ஆண்டுகளில் பெரிதாக எவ்வித வளர்ச்சியும் இல்லை.தென்பெண்ணையாற்றில் வரும் வெள்ளம் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வலுவான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

இதன் மூலம் விவசாயம் செழிப்படையும்” என்றார். மேலும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட நலனில் அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்களின் கருத்துகளுடன் நமது பார்வையும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்.. அடுத்தடுத்த நாட்களில் தொடரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x