Published : 29 Aug 2023 04:04 AM
Last Updated : 29 Aug 2023 04:04 AM

புதுச்சேரி கடற்கரையில் கண்கவர் கண்காட்சி - 95 ஆண்டுகள் பழமையான கார்களை பார்த்து வியந்த மக்கள்

புதுச்சேரியில் சுற்றுலாத் துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் இணைந்து நடத்திய பாரம்பரிய கார் கண்காட்சியில் இடம்பெற்ற கார்கள்.படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார்களின் அணி வகுப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில்,95 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கார்கள் உள்பட பல்வேறு கார்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அக்கால மகாராஜாக்கள், வெளி நாட்டவர்கள் பயன்படுத்திய கார்களும் வலம் வந்தன.

புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பாக கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடந்து வருகிறது. இடையில் கரோனா ஊரடங்கு தருணத்தில் இக்கண்காட்சி தடைபட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று பாரம்பரிய கார் அணிவகுப்பு கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல் (ரூ. 3 கோடி மதிப்பு),நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்ஜி. டார்ஜ்,செவர்லெட், ஃபோர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ் பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில் அக்கால மகா ராஜாக்கள், பழங்கால பிரபுக்கள், பிரிட்டிஷ் இளவரசி இந்தியா வந்தபோது பயன்படுத்திய கார் ஆகியன இடம் பெற்றிருந்ததாக சில கார்களின் உரிமையாளர்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர். மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி, கோவை என நாடு முழுவதும் பல்வேறு நகர்களில் இருந்து இம்முறை கார்கள் வந்திருந்தன.

அதேபோல் 10 பாரம்பரியமான மோட்டார் சைக்கிள்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர் பெயர், தயாரிக்கப்பட்ட ஆண்டுபோன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ பாஸ்கர், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி வகுத்து நின்ற பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், அந்த கார்களின் முன்பு நின்றபடி படம் எடுத்துக் கொண்டனர்.

இக்கண்காட்சி தொடர்பாக பாரம்பரிய கார்களின் சங்கத்தினர் கூறுகையில்,“இந்நிகழ்வு அரசுக்கும், சுற்றுலாத் துறைக்கும் மிகுந்த பெருமை சேர்க்கக் கூடிய, பார்வையாளர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த பழங்கால கார்களை பராமரிக்கவே நாங்கள் தனி சிரத்தை எடுக்கிறோம்” என்று தெரிவித்தனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x