Published : 18 Aug 2023 01:52 PM
Last Updated : 18 Aug 2023 01:52 PM

கோவை ஜி.டி. மியூசியம் வளாகத்தில் இந்திய கார்களுக்கான சிறப்பு அருங்காட்சியகம் திறப்பு

கோவை: கோவை ஜி.டி.மியூசியம் வளாகத்தில், இந்திய கார்கள் குறித்த பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை சந்திப்பு அருகே, ஜி.டி.அருங்காட்சியகம் உள்ளது.இந்த வளாகத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பழங்கால கார்கள், வெளிநாட்டு வகை கார்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இந்தியாவைச் சேர்ந்த பழங்கால கார்களை கொண்ட சிறப்பு பிரிவு அருங்காட்சியகம் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் 1948-ல் உருவாக்கப்பட்ட கார்களில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கார்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் ஜி.டி கார் அருங்காட்சியகம் கடந்த 2015-ம்ஆண்டு திறக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், கோரிக்கைகளின் அடிப்படையில் 1947-ம் ஆண்டு முதல் இந்திய வாகனத் துறையின் சாதனைகள், வளர்ச்சியை விளக்கும் வகையில், வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட இந்திய கார் வகைகள் குறித்த சிறப்புப் பிரிவு அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்சிறப்புப் பிரிவு இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. 10,500 சதுரடி பரப்பளவு கொண்ட இச்சிறப்புப் பிரிவில் வெவ்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கார்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கார்கள், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோ மொபைல்ஸ், ஸ்டேண்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ,பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாகும்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி, இந்தியாவில் மக்களின் பயன்பாட்டுக்காக கார்களை தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விளக்கும் வகையில் இச்சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த சிறப்புப் பிரிவை மக்கள் பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, ஜி.டி. அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலா சண்முகம், பொதுமேலாளர் சுரேஷ் நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சிறப்புப் பிரிவில் அம்பாசிட்டர், பிளைமவுத், பியட் என பழங்காலத்திலும், இன்டிகோ, நானோ என 2000-வது ஆண்டுக்கு பிந்தைய காலகட்டங்களிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தவிர, தந்தை பெரியார் தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய, அவரது 75-வது பிறந்த நாளையொட்டி, மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவால் வழங்கப்பட்ட பிரச்சாரப் பேருந்து, ஜிடி நாயுடுவால் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் கரியை எரிப்பதால் கிடைக்கும் வாயு மூலம் இயங்கும் பழநி - உடுமலை - கோவை வழித்தட பேருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்ட எடிட்டிங் வசதி கொண்ட ஸ்டுடியோ வேன் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x